ஆண்கள் சுய உதவிக் குழுக்களுக்கும், அனைத்து வங்கிகளிலும் கடன் வழங்க வேண்டும் என, திருவட்டார் ஒன்றிய சேவாபாரதி ஆண்கள் சுய உதவிக் குழு மாநாட்டில் கோரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.
திருவட்டார் ஒன்றிய சேவா பாரதி ஆண்கள் சுய உதவிக் குழு மாநாடு குலசேகரத்தில் சென்ற ஞாயிற்றுக்கிழமை நடைபெற்றது.
இந்த மாநாட்டில், கூட்டுறவு வங்கிகள் மூலம் சுய உதவிக் குழுக்களுக்கு வழங்கும் கடனுக்கான வட்டியை குறைக்க வேண்டும். தேசியமயமாக்கப்பட்ட வங்கிகளில் மகளிர் சுய உதவிக் குழுக்களுக்கு கடன் வழங்குவது போல். ஆண்கள் சுய உதவிக் குழுக்களுக்கும் வழங்க வேண்டும் அரசு வழங்கும் சுழல் நிதி ஆண்கள் சுய உதவிக் குழுக்களுக்கும் கிடைக்க வேண்டும்.
அத்துடன் பொருளாதாரத்தில் தன்னிறைவு பெற்ற ஆண்கள் சுய உதவிக் குழுக்களுக்கு தொழில் கடன் வழங்கவும் அரசு முன் வர வேண்டும் என தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன.
இந்த மாநாட்டிற்கு மாவட்டத் தலைவர் அசோக் குமார் தலைமை வகித்தார். மாநில வித்தியாபாரதி அமைப்பாளர் கிருஷ்ண ஜெகநாதன் பேசினார். விவேகானந்த ஆஸ்ரமம் வெள்ளி மலை சுவாமிகள் சக்தி சைதயானந்தஜி ஆசியுரை வழங்கினார். ஒன்றிய நிர்வாகிகள் கனகராஜ், கிருஷ்ணமணி உள்ளிட்டோர் பங்கேற்றனர்.