திருப்பூரில் பனியன் தொழிற்சாலைகளில் வேலை பார்க்கும் தொழிலாளர்கள், பொங்கல் விடுமுறைக்கு பிறகு, பணிக்கு திரும்பாததால்,பனியன் உற்பத்தி பாதிக்கப்பட்டுள்ளது.
பனியன் தொழிற்சாலைகளில் வேலை பார்க்கும் தொழிலாளர்களில் பெரும்பான்மையானவர்கள் வெளியூரைச் சேர்ந்தவர்கள். இவர்கள் பொங்கல் பண்டிகையை முன்னிட்டு சொந்த ஊருக்கு சென்றுள்ளனர். இவர்களில் 60 விழுக்காட்டினர், விடுமுறைக்கு பிறகு பணிக்கு திரும்பவில்லை.
பனியன் தொழிற்சாலைகளில் வேலை பார்க்கும் தொழிலாளர்கள் மதுரை, தேனி, திண்டுக்கல் போன்ற தென் மாவட்டத்தைச் சேர்ந்தவர்கள் பணியாற்றி வருகின்றனர்.
பொங்கல் பண்டிகையை ஒட்டி ஜன.14 ஆம் தேதி முதல் 18 வரை 5 நாட்களுக்கு விடுமுறை விடப்பட்டது. பொங்கல் பண்டிகை முடிந்து திங்கள்கிழமை முதல் நிறுவனங்கள் அனைத்தும் இயங்க தொடங்கின. ஆனால், சொந்த ஊர்களுக்குச் சென்றவர்களில் 60 விழுக்காட்டினர் வேலைக்கு திரும்பி வராததால் பணிகள் வெகு மந்தமாகவே நடந்து வருகின்றன.
இதனால் உள்நாட்டு, ஏற்றுமதி நிறுவனங்களில் நாளொன்றுக்கு சுமார் ரூ.15 கோடி மதிப்புள்ள பனியன் உற்பத்தி பாதிக்கப்பட்டுள்ளதாக தென்னிந்திய பனியன் உற்பத்தியாளர் சங்க தலைவர் கரோனா கே.சாமிநாதன் தெரிவித்தார்.
அவர் மேலும் கூறுகையில், பனியன் நிறுவனத்தில் கைமடி, செக்கிங், ஹெல்பர் உள்ளிட்ட பணிகளில் பெரும்பாலும் பெண்களே ஈடுபட்டுள்ளனர். இப்பெண் தொழிலாளர்கள் பெரும்பாலானோர் பணிக்கு திரும்பவில்லை. மேலும் தென் மாவட்டங்களில் ஆங்காங்கே நடக்கும் ஜல்லிக்கட்டு, கபடி உள்ளிட்ட வீர விளையாட்டுகளில் இளந்தொழிலாளர்கள் அதிகமாக ஈடுபட்டுள்ளதாலும் பணிக்கு திரும்பாமல் உள்ளனர்.
இதனால், நிறுவனங்களில் தற்போது 40 விழுக்காடு தொழிலாளர்கள் மட்டுமே பணியில் ஈடுபட்டுள்ளனர். முழுமையான தொழிலாளர்களும் பணிக்கு திரும்ப ஒரு வாரத்துக்கு மேலாகும் என்று தெரிவித்தார்.