பயங்கரவாதத்திற்கு எதிரான போரில் கார்பரேட் நிறுவனங்கள்
ஞாயிறு, 18 ஜனவரி 2009 (18:30 IST)
பயங்கரவாதத்திற்கு எதிரான போருக்குத் தங்களின் முழு ஆதரவைத் தருவதாகக் முன்னணிக் கார்பரேட் நிறுவனங்கள் உறுதியளித்துள்ளன.
பயங்கரவாதப் பிரச்சனைக்குத் தீர்வுகாண நமது நாட்டின் அனைத்துப் பங்குதாரர்களும் ஒன்றுபட்டு நிற்க வேண்டும் என்றும் அந்நிறுவனங்களின் தலைவர்கள் வலியுறுத்தியுள்ளனர்.
மும்பையில் இன்று நடந்த நிகழ்ச்சி ஒன்றில் பேசிய டாடா கன்சல்டன்சி சர்வீசஸ் (டி.சி.எஸ்.) நிறுவனத்தின் முதன்மைச் செயல் அதிகாரியும் நிர்வாக இயக்குநருமான எஸ். ராமதுரை, "பயங்கரவாதத்திற்கு எதிராக அரசு, தனியார் துறையினர், பாதுகாப்பு முகமைகள், வர்த்தக நிறுவனங்கள், அவற்றின் பங்குதாரர்கள் என அனைவரும் ஒன்றுபட்டுப் போராட வேண்டும்" என்று வலியுறுத்தினார்.
பயங்கரவாதத்தை முறியடிக்க அரசு, குடிமக்கள் ஆகியோருடன் கார்பரேட் நிறுவனங்களும் இணைந்து நிற்க வேண்டும் என்று டெவலப்மென்ட் கிரெடிட் வங்கித் தலைவர் நாசர் முனீஜி வலியுறுத்தினார்.
கோடெக் மகேந்திரா நிறுவனத்தின் துணைத் தலைவர் உதய் கோடெக் பேசுகையில், "பயங்கரவாதத்திற்கு எதிராகப் போராட, காவல்துறை, நீதித்துறை, அரசு போன்ற சமூகத் தூண்களை வலுப்படுத்த வேண்டியது இந்த நாட்டின் குடிமகன் என்ற முறையில் நமது கடமை" என்றார்.