பணவீக்கம்-நிதியமைச்சகம் விளக்கம்

வெள்ளி, 16 ஜனவரி 2009 (15:24 IST)
மத்திய நிதியமைச்சகத்தின் பொருளாதார விவகாரங்கள் பிரிவு பணவீக்கம் விகிதம் குறித்து விடுத்துள்ள அறிக்கையில், சென்ற ஜனவரி 3 ஆம் தேதியுடன் முடிந்த வாரத்தில் பணவீக்க விகிதம் 5.2 விழுக்காடாக குறைந்துள்ளது.

அதற்கு முந்தைய வாரத்தில் பணவீக்கம் 5.9% ஆக இருந்தது. இந்த வாரம் மொத்த விலை குறியிட்டு எண் அட்டவனையில் 67 அடிப்படை புள்ளிகள் குறைந்துள்ளது.
பணவீக்கம் சென்ற வருடம் ஆகஸ்ட் 8 ஆம் தேதியுடன் முடிவடைந்த வாரத்தில் அதிகபட்சமாக 12.9% இருந்து.

கடந்த ஐந்து மாத காலத்தில் பணவீக்கம் 767 அடிப்படை புள்ளிகள் குறைந்துள்ளது.

அத்தியாவசியப் பொருட்களின் பிரிவில், பணவீக்க விகிதம் தொடர்ச்சியாக கடந்த வாரமும் குறைந்த அளவே காணப்பட்டது.

முக்கிய பொருட்கள் வகையில் முந்தைய வாரம் 11.6% இருந்த பணவீக்க விகிதம், அதற்கு அடுத்த வாரம் 10.9% குறைந்துள்ளது. இதில் உணவு மற்றும் உணவுப் பொருட்கள் அல்லாத பிரிவில் பணவீக்க விகிதம் 9.5-9.6% ஆக இருந்தது.

இரும்பு மற்றும் மாங்கனீஸ் மூலப் பொருள், புளோரைட், மெக்னசைட், பாஸ்போரைட் மற்றும் பெல்ஸ்பார் ஆகிய தாதுக்களின் அதிக பணவீக்கம் காரணமாக கனிமப் பொருட்களின் பணவீக்க விகிதம் தொடர்ந்து மூன்றாவது வாரமாக 40% என்ற அளவிலேயே இருந்தது.

எரிபொருள் மற்றும் ஆற்றல் பிரிவில் பணவீக்க விகிதம் (-)1.3 ஆக இருந்தது. இது அதற்கு முந்தைய வாரத்தில் (-)0.7 ஆக இருந்தது.

உற்பத்தி பொருட்கள் பிரிவில் முந்தைய வாரம் பணவீக்க விகிதம் 6.2% இருந்ததை ஒப்பிடுகையில், கடந்த வாரம் 5.6% குறைந்தது. அதே நேரத்தில் சர்க்கரை, உப்பு, புகையிலைப் பொருட்கள், ஜவுளி, ரப்பர், சிமெண்ட், சிலேட், கிராபைட், அடிப்படை உலோகங்கள், கலப்பு உலோகங்கள் ஆகியவற்றில் பணவீக்க விகிதம் 2 இலக்கமாகவே நீடித்துள்ளது.

கூட்டு உணவு விலைப் பட்டியலில் (எடை=25.43 சதவீதம்) இந்த ஜனவரி மாதம் 3 ஆம் தேதியுடன் முடிவடைந்த வாரத்தில் பணவீக்க விகிதம் 7.9% குறைந்திருந்தது. இது அதற்கு முந்தைய வாரத்தில் 8.5% இருந்தது. உணவு தானியங்கள், பழங்கள் ஆகியவை அதிக பணவீக்க விகிதமாக 9 சதவீதம் முதல் 20 % வரை தொடர்ந்து இருந்து வந்தது என்று கூறப்பட்டுள்ளது.

வெப்துனியாவைப் படிக்கவும்