சத்யம் கம்ப்யூட்டர்- செபி அதிகாரிகளை தண்டிக்க வேண்டும்
செவ்வாய், 13 ஜனவரி 2009 (18:06 IST)
இந்திய குடியரசுக் கட்சி தலைவரும், மகாராஷ்டிரா மாநிலம் பந்தார்பூர் தொகுதி மக்களவை உறுப்பினருமான ராம்தாஸ் அத்வால், சத்யம் கம்ப்யூட்டர் கணக்கு முறைகேடுகள் பற்றி சி.பி.ஐ (மத்திய புலனாய்வு கழகம்) விசாரணைக்கு உத்தரவிடுவதுடன், இந்த பிரச்சனயில் பாராமுகமாக இருந்து செபி அதிகாரிகளுக்கு தண்டனை வழங்க வேண்டும் என்று கோரிக்கை விடுத்தார்.
இவர் 2003 ஆம் ஆண்டுகளிலேயே சத்யம் கம்ப்யூட்டர் நிறுவனத்தில் முறைகேடு நடப்பதாக குற்றம் சுமத்தி இருந்தார். அத்துடன் ஆந்திர மாநில முதல்வராக இருந்த சந்திரபாபு நாயுடுவுக்கும், சத்யம் நிறுவனத்தின் சேர்மன் ராமலிங்க ராஜுவுக்கும் நெருங்கிய தொடர்பு இருக்கின்றது. இதனால் பாரதிய ஜனதா கட்சி தலைமையிலான தேசிய ஜனநாயக முன்னணி அரசு நடவடிக்கை எடுக்க தயங்குகிறது என்று குற்றம் சாட்டி இருந்தார். (வாஜ்பாய் தலையிலான மத்திய அரசுக்கு, சந்திரபாபு நாயுடுவின் தெலுங்கு தேசம் வெளியில் இருந்து ஆதரவு அளித்து வந்தது நினைவிருக்கலாம்).
லக்னோவில் ராம்தாஸ் அத்வால் இன்று செய்தியாளர்களிடம் பேசுகையில், சத்யம் கம்ப்யூட்டர் நிறுனத்தில் ரூ.20 கோடி முறைகேடு நடந்துள்ளதாக 2003 ஆம் ஆண்டு ஆகஸ்ட் 18 ந் தேதி செபிக்கு கடிதம் எழுதினேன். அத்துடன் கோடை கால மக்களவை கூட்டத் தொடரில் இதே பிரச்சனையை எழுப்பி, உயர் மட்ட அளவில் விசாரணை நடத்த வேண்டும் என்று கேட்டேன். மத்தியில் ஆட்சியில் இருந்த தேசிய ஜனநாயக முன்னணி அரசு, தெலுங்கு தேசம் கட்சியின் ஆதரவுடன் ஆட்சி நடத்தி வந்தது. இந்த கட்சி ஆந்திராவில் ஆட்சியில் இருந்தது. இதனால் எனது கோரிக்கை எல்லாம் “செவிடன் காதில் ஊதிய சங்காக” போனது என்று கூறினார்.
அத்துடன், தற்போது ரூ.7 ஆயிரம் கோடி வரை முறைகேடு நடந்துள்ளது. இதை சி.பி.ஐ விசாரணை நடத்தினால் மட்டுமே கண்டுபிடிக்க முடியும். எனது கடிதத்தை உதாசீனப்படுத்திய செபி அதிகாரிகளையும் தண்டிக்க வேண்டும்.
மத்திய அரசு எனது கடிதத்தின் அடிப்படையில் 2003 ஆம் ஆண்டிலேயே நடவடிக்கை எடுத்திருந்தால், தற்போது வெளியாகியுள்ள மோசடியை தவிர்தது இருக்கலாம். மும்பையைச் சேர்ந்த கணக்கு தணிக்கையாளர் சேகர் வைஷ்ணவ், சத்யம் கம்ப்யூட்டர் நிறுவன தவறுகள் பற்றிய தகவல்களை கொடுத்ததாகவும் ராம்தாஸ் அத்வால் தெரிவித்தார்.