லுங்கி உற்பத்தியாளர்கள் கோரிக்கைகளை வலியுறுத்தி ஜன.15-ம் தேதி முதல் காலவரையற்ற உற்பத்தி நிறுத்தம் செய்ய குடியாத்தம் கைத்தறி லுங்கி உற்பத்தியாளர்கள் சங்கம் தீர்மானித்துள்ளது.
உலக பொருளாதார வீழ்ச்சியின் காரணமாக ஜவுளித் துறையின் முக்கிய அங்கமான கைத்தறித் தொழில் மிகவும் பாதிப்புக்குள்ளாகியுள்ளது.
கைத்தறி லுங்கிகள் விற்பனையாகாமல் தேங்கியுள்ளதால் உற்பத்தியாளர்களுக்கு நிதி நெருக்கடி ஏற்பட்டுள்ளது.
லுங்கி உற்பத்தியாளர்களுக்கு சலுகை விலையில் நூல் வழங்க வேண்டும். இத்துடன் வட்டியில்லா கடன் வழங்க வேண்டும்.
லுங்கி உற்பத்தியாளர்களிடம் பெருமளவில் தேங்கியுள்ள லுங்கிகளை கோ-ஆப்டெக்ஸ் மூலம், கூட்டுறவு சங்கங்களிடம் இருந்து கொள்முதல் செய்யும் விலைக்கே கொள்முதல் செய்ய வேண்டும்.
குடியாத்தம் நகரில் நூல் விற்பனை மையம் அமைக்க வேண்டும். கூட்டுறவு சங்க நெசவாளர்களுக்கு அரசு வழங்கும் அனைத்து சலுகைகளையும் தனியார் உற்பத்தியாளர்களிடம் தொழில் செய்யும் நெசவாளர்களுக்கும் வழங்க வேண்டும்.
நெசவாளர் குடும்பங்கள் வங்கியில் பெற்றுள்ள கடன்களை முழுமையாக தள்ளுபடி செய்ய வேண்டும் என்று இந்த சங்கத் தலைவர் வி.என். தனஞ்செயன், செயலர் கே.எம். அண்ணாமலை ஆகியோர் நேற்று செய்தியாளர்களிடம் தெரிவித்தனர்.