7 ஆண்டு கணக்குகள் திருத்தம்: ராமலிங்க ராஜூ ஒப்புதல்
திங்கள், 12 ஜனவரி 2009 (14:08 IST)
சத்யம் டெக்னாலஜிஸ் கணினி நிறுவனத்தின் முன்னாள் தலைவர் ராமலிங்க ராஜூ, நிறுவனத்தின் 7 ஆண்டு கணக்குகளை திருத்தம் செய்யப்பட்டதை காவல்துறையினரிடம் விசாரணையின் போது ஒப்புக் கொண்டுள்ளார்.
சத்யம் நிறுவனத்தில் சுமார் 7 ஆயிரம் கோடி ரூபாய் அளவுக்கு நிதி முறைகேடு நடைபெற்றதைத் தொடர்ந்து, சத்யம் தலைவர் பதவியில் இருந்து ராமலிங்க ராஜூவும், தலைமை நிர்வாகி பதவியில் இருந்து அவரது தம்பி ராம ராஜூவும் ராஜினாமா செய்தனர்.
இதையடுத்து கடந்த சனிக்கிழமையன்று இரவு ராமலிங்க ராஜூவையும், ராமராஜூவையும் ஆந்திர மாநில காவல்துறையினர் கைது செய்து விசாரணை நடத்தினர்.
சத்யம் நிறுவனத்திற்கு அதிக வர்த்தகம் வர வேண்டும் என்பதற்காக கணக்குகளில் திருத்தம் செய்ததை ராமலிங்க ராஜூ ஒப்புக் கொண்டதாகத் தெரிகிறது.
ஒவ்வொரு ஆண்டும் சத்யம் நிறுவனத்தின் நிதி இருப்பை அதிகரித்ததாகவும், இதற்காக 7 ஆண்டுகளுக்கும் மேலாக கணக்குகளை மாற்றியமைத்ததாகவும் அவர் ஒப்புக்கொண்டார்.
இதற்கிடையே ராமலிங்க ராஜூவும், அவரது சகோதரரும் தாக்கல் செய்த ஜாமீன் மனுவை நீதிமன்றம் வரும் 16ஆம் தேதி வரை ஒத்திவைத்து நீதிமன்றம் உத்தரவிட்டது. மேலும் அவர்கள் இருவரையும் போலீஸ் காவலில் எடுப்பதற்கு தாக்கல் செய்யப்பட்ட மனுவின் விசாரணையையும் 16ஆம் தேதி வரை ஒத்திவைத்து உத்தரவிடப்பட்டுள்ளது.
இதற்கிடையே ராஜூவிடம் வாக்குமூலம் வாங்குவதற்கு ஏதுவாக அனுமதி கோரி பங்குகள் பரிவர்த்தனை கழகம் (செபி) தாக்கல் செய்த மனுவையும் நீதிபதி, வரும் 16ஆம் தேதிக்கு ஒத்திவைத்தார்.
இந்தியாவில் சத்யம் நிறுவனத்தின் வங்கிக் கணக்குகளை ஆய்வு செய்யும் பணிகளை ஆந்திர மாநில குற்றப் புலனாய்வு காவல்துறையினர் தொடங்கியிருக்கிறார்கள்.
இந்திய தகவல் தொழில்நுட்பத் துறையில் நடந்துள்ள மிக அதிக அளவு நிதி முறைகேடு இது என்பதால், மற்ற இயக்குனர்களின் பங்கு, பட்டயக் கணக்காளர்கள் (சார்ட்டர்டு அக்கவுண்டன்ட்) ஆகியோரின் பங்கு குறித்தும் காவல்துறையினர் விசாரணை நடத்தவுள்ளனர்.
இந்நிலையில் சத்யம் நிறுவனத்திற்கு 3 பேர் கொண்ட புதிய இயக்குனர்கள் குழு அமைக்கப்பட்டு, அவர்களின் முதலாவது கூட்டம் இன்று ஹைதராபாத்தில் நடைபெறுகிறது.