சத்யம் முதலீட்டாளர்களுக்கு ரூ.13,600 கோடி நஷ்டம்

திங்கள், 12 ஜனவரி 2009 (13:16 IST)
சத்யம் கம்ப்யூட்டர் நிறுவனத்தின் பங்குகளில் முதலீடு செய்த முதலீட்டாளர்கள், இதன் பங்கு விலைகள் குறைந்ததால் கடந்த ஒரு மாதத்தில் மட்டும் ரூ. 13,600 கோடி நஷ்டமடைந்துள்ளனர்.

சத்யம் கம்ப்யூட்டர் நிறுவனத்தின் சந்தை மதிப்பு, ஒரு மாதத்திற்கு முன்பு ரூ.15,262 கோடியாக இருந்தது. தற்போது இதன் சந்தை மதிப்பு ரூ.1,607 கோடியாக சரிந்துள்ளது.

சத்யம் கம்ப்யூட்டர் நிறுவனத்தின் சேர்மன் ராமலிங்க ராஜுவின் மகன்களுக்கு சொந்தமான, மாஸ்டாஸ் இன்பிராஸ்டிரக்சர் மற்றும் மாஸ்டாஸ் பிராப்பர்டீஸ் நிறுனங்களை ரூ. 8 ஆயிரம் கோடிக்கு வாங்கப்போவதாக சத்யம் கம்ப்யூட்டர் நிறுவனம் அறிவித்தது. இந்த தகவல் வெளியான உடனேயே பிரச்னை ஆரம்பமானது.

இந்த நிறுவனங்களை வாங்குவதற்கு முதலீட்டு நிறுவனங்கள் முதல் சிறு முதலீட்டாளர்கள் வரை அனைத்து தரப்பினரும் கடும் எதிர்ப்பு தெரிவித்தனர். இதனால் அடுத்த நாளே வாங்கும் முடிவை கைவிடுவதாக ராமவிங்க ராஜு அறிவித்தார்.

அதைத் தொடர்ந்து உலக வங்கி சத்யம் கம்ப்யூட்டர் நிறுவனத்திற்கு 8 ஆண்டுக்கு தடை விதித்திருப்பதாக அறிவித்தது. இது எரியும் நெருப்பில் மேலும் நெய் வார்ப்பதாக அமைந்தது. இதனால் சத்யம் நிறுவனத்தின் பங்குகள் விலை கடுமையாக சரியத் தொடங்கியது.

சத்யம் கம்ப்யூட்டர் நிறுவனத்தின் வருவாய், இலாபம் போன்றவற்றை உண்மையான அளவுகளை விட, அதிகரித்து காண்பிக்க கணக்குகளில் செயற்கையாக வருவாய், இலாபம் அதிகப்படுத்தி காண்பிக்கப்பட்டுள்ளது.

இதை சரிகட்டும் விதமாக மாஸ்டாஸ் இன்பிராஸ்டிரக்சர், மாஸ்டாஸ் பிராப்பர்டீஸ் நிறுவனங்களை வாங்கி கணக்குகளை சரிசெய்து விடலாம் என்று ராமலிங்க ராஜுவும், அவரைச் சேர்ந்தவர்களும் திட்டமிட்டு இருந்தனர்.

இந்த திட்டம் முதலீட்டாளர்களின் எதிர்ப்பால் தோல்வியடைந்தது.

இந்நிலையில் சென்ற புதன் கிழமை ராமலிங்க ராஜு தலைவர் பதவியை ராஜிநாமா செய்தார். அவர் சத்யம் கம்ப்யூட்டர் நிறுவனத்தின் கணக்குகளில் ரூ.7 ஆயிரம் கோடி வரை முறைகேடாக காண்பிக்கப்பட்டுள்ளது என்ற தகவலையும் பகிரங்கமாக அறிவித்தார்.

இதை தொடர்ந்து பங்குச் சந்தைகளில் இதன் பங்கு விலை மேலும் சரிந்தது. இதன் பங்கு விலை 19 நாட்கள் வர்த்தகத்தில் ரூ.200 இல் இருந்து ரூ.23 ஆக குறைந்தன.

மும்பை பங்குச் சந்தையின் சென்செக்ஸ், தேசிய பங்குச் சந்தையின் நிஃப்டி பிரிவுகளில் இருந்தும் சத்யம் கம்ப்யூட்டர் பங்குகள் நீக்கப்பட்டன.

சத்யம் நிறுவனத்தின் சேர்மன் ராமலிங்க ராஜுவின் மகன்களுக்கு சொந்தமான நிறுவனங்களின் பெயர் மாஸ்டாஸ் இன்பிராஸ்டிரக்சர், மாஸ்டாஸ் பிராப்பர்டீஸ். ஆங்கிலத்தில் MAYTAS.

சத்யம் என்ற பெயரை ஆங்கில எழுத்துக்களை மாற்றி போட்டால் மாஸ்டாஸ் என்று வரும்.

SATYAM= MAYTAS.

வெப்துனியாவைப் படிக்கவும்