சத்யம் கம்ப்யூட்டர் நிறுவனத்தின் நிர்வாகத்தை சுமுகமாக நடத்த மூன்று இயக்குநர்களை மத்திய அரசு நியமித்துள்ளது.
நசோசெம் அமைப்பின் முன்னாள் தலைவர் கிரன் கார்னிக், ஹெச்.டி.எப்.சி பைனான்ஸ் கார்ப்பரேஷன் சேர்மன் தீபக் பரேக், செபியின் உறுப்பினரும், செபி மேல்முறையீட்டு மன்றத்தின் தலைவராகவும் இருந்த சி.அச்சுதன் ஆகியோர் நியமிக்கப்பட்டுள்ளனர்.
சத்யம் கம்ப்யூட்டர் நிறுவனத்தின் சேர்மன் ராமலிங்க ராஜி, ரூ.7000 கோடி முறைகேடு செய்ததை தொடர்ந்து, சேர்மன் பதவியில் இருந்து சென்ற வாரம் ராஜினாமா செய்தார். இதே போல் இவரின் தம்பியும் மேலாண்மை இயக்குநருமான ராம ராஜிவும் பதவியை ராஜினாமா செய்தார்.
இந்த நிறுவனத்தை தொடர்ந்து இயக்கு வைக்கவும், நிர்வாகத்தை கவனிக்கவும் புதிய இயக்குநர்களை நியமிக்க மத்திய அரசு, கம்பெனி லா போர்டிடம் அனுமதி கேட்டது. இந்த அனுமதியை தொடர்ந்து புதிய இயக்குநர்கள் ஞாயிற்றுக் கிழமை அறிவிக்கப்படுவார்கள் என்று நிறுவன விவகாரத்துறை அமைச்சர் பிரேம் சந்த் குப்தா சனிக்கிழமை அறிவித்து இருந்தார்.
இதனை தொடர்ந்து நேற்று புதிய இயக்குநர்களின் பெயர்களை அறிவித்தார். இத்துடன் மேலும் புதிய இயக்குநர்கள் நியிமிக்கப்படுவார்கள் என்று தெரிவித்தார்.
புதிய இயக்குநர்களின் கூட்டம் இன்று காலை ஹைதராபாத்தில் நடைபெறுகிறது. இதில் சேர்மன் தேர்ந்தெடுக்கப்படுவார்.