சத்யம் கம்ப்யூட்டர் நிதி முறைகேடு - அரசு விசாரணை

புதன், 7 ஜனவரி 2009 (16:00 IST)
சத்யம் கம்யூட்டர் நிறுவனத்தில் நடந்துள்ள நிதி முறைகேடுகளை பற்றி விசாரணை செய்ய பொருளாதார மோசடி விசாரணை பிரிவு [Serious Fraud Investigation Office (SFIO) ] விசாரிக்க உத்தரவிடும் என்று மத்திய அரசு கூறியுள்ளது.

ஹைதராபாத்தை தலைமையிடமாக கொண்டு இயங்கும் சத்யம் கம்யூட்டர் நிறுவனத்தின் நிறுவனரும், சேர்மனுமான ராமலிங்க ராஜு, நிதி முறைகேடு குற்றச் சாட்டுகள் எழுந்ததை தொடர்ந்து, இன்று பதவியை ராஜுனாமா செய்தார். இதன் கணக்கு புத்தகங்களில் உள்ள இருப்புக்கும், உண்மையிலேயே வங்கிகளிலும், ரொக்கமாக இருக்கும் பணத்திற்கும் அதிக வேறுபாடு உள்ளது தெரியவந்துள்ளது. அத்துடன் இலாப கணக்குகளை காண்பிப்பதற்காக, கணக்குகளில் முறைகேடுகள் செய்துள்ள தகவல்களும் தெரிய வந்துள்ளன.

இந்நிலையில் மத்திய நிறுவன விவகார (Corporate Affairs) அமைச்சர் பி.சி. குப்தா, இன்று செய்தியாளர்களிடம் கூறுகையில், இதன் கணக்குகள் சோதனை செய்யப்பட்டதற்கு பிறகு, பொருளாதார மோசடி விசாரணை பிரிவிடம் விசாரணைக்கு ஒப்படைக்கப்படும். மோசடி நடந்திருந்தால் அது வெட்கக்கேடானது.

சத்யம் கம்யூட்டர் நிறுவனத்தில் நிதியை கையாள்வதில் மோசடி நடந்திருந்தால், சட்டப்படி கடுமையான நடவடிக்கை எடுக்கப்படும். எனது அமைச்சக அதிகாரிகள், பங்குச் சந்தையை கட்டுப்படுத்தும் செபியிடம் இடைவிடாத தொடர்பு கொண்டு தேவையான நடவடிக்கை எடுக்கும் என்று தெரிவித்தார்.

வெப்துனியாவைப் படிக்கவும்