வெளிநாடு வாழ் இந்தியர் பிரதமரின் ஆலோசனைக் குழு அமைப்பு
புதன், 7 ஜனவரி 2009 (12:39 IST)
புது டெல்லி: வெளிநாடு இந்தியர் நலனுக்கான பிரதமரின் சர்வதேச ஆலோசனைக் குழு பிரதமர் டாக்டர் மன்மோகன் சிங் தலைமையில் நேற்று அமைக்கப்பட்டது.
சென்னையில் இன்று வெளிநாடு வாழ் மற்றும் இந்திய வம்சாவளியினர் மாநாடு நடைபெறுகிறது.
இந்த ஆலோசனைக் குழு, இந்திய மேம்பாட்டுப் பணிகளில் அதிக திறன் வாய்ந்த வெளிநாடு வாழ் இந்தியர் மற்றும் இந்திய வம்சாவளியினரின் திறன்களை பயன்படுத்தும் வகையில் அமைக்கப்பட்டுள்ளது.
இக்குழுவிற்கு பிரதமர் டாக்டர் மன்மோகன் சிங் தலைமை வகிப்பார். இதன் உறுப்பினர்களாக வெளியுறவுத் துறை அமைச்சர், வெளிநாடு வாழ் இந்தியர் நலத் துறை அமைச்சர், மத்திய அரசின் சில மூத்த அதிகாரிகள் ஆகியோர் இடம் பெற்றுள்ளார்கள். அவர்களுடன் வெளிநாடுகளை சேர்ந்த இந்திய வம்சாவளியினர் 20 பேரும் உறுப்பினர்களாக நியமிக்கப்பட்டுள்ளார்கள்.
இந்த குழுவின் உறுப்பினர்களாக பேராசிரியர் ஜெகதீஷ் பகவதி, கரன் எப் பில்மோரியா, ஸ்வதேஷ் சட்டர்ஜி, இலா காந்தி, ரஜத் குப்தா, டாக்டர் ரேணு கட்டோர், கலித் ஹமீத் பிரபு, கிஷோர் மஹபூபனி, எல் என் மிட்டல், பி என் சி மேனன், இந்திரா கே நூயி, பிக்கு சோட்டாலால் பரேக், பேராசிரியர் சி கே பிரஹலாத், தன்ஸ்ரீ டத்தோ அஜித் சிங், டாக்டர் அமர்தியா சென், விக்ரம் பண்டிட், சாம் பிட்ரோடா, சசி தரூர், பேராசிரியர் ஸ்ரீனிவாச எஸ் ஆர் வரதன், யூசப் அலி ஆகியோர் நியமிக்கப்பட்டுள்ளனர்.
இந்த சர்வதேச ஆலோசனைக் குழு, மத்திய அரசுடன் வெளிநாடு இந்தியர்கள் கருத்து பரிமாற்றம் செய்துகொள்ளும் அமைப்பாக ஏற்படுத்தப்பட்டுள்ளது.
இக்குழு வர்த்தக தொடர்புகள், திறன் மேம்பாடு, இந்தியாவில் வெளிநாடு வாழ் இந்தியர்களால் நலப்பணிகளை மேற்கொள்ளுதல் போன்றவற்றுக்கும் உதவும்.