ரியல் எஸ்டேட்டால் வங்கிகள் பாதிப்பு

செவ்வாய், 6 ஜனவரி 2009 (15:59 IST)
துபாய்: வீடு, அடுக்குமாடி குடியிருப்புகளின் விலை அதிகரித்ததால், பலர் வங்கியில் கடன் வாங்கி வீடுகளை வாங்கினார்கள். இவர்களுக்கு வாங்கிய கடனை திருப்பி கட்ட கூடிய அளவு வருவாய் இருக்கின்றதா என்பதை பரிசீலிக்காமல் வங்கிகளும் கடனாக வாரி வாரி வழங்கின. ரியல் எஸ்டேட் துறை அமோகமாக செழித்து வளர்ந்தது.

தற்போது ஏற்பட்டுள்ள நெருக்கடியால், ரியல் எஸ்டேட் துறை திடீரென சரிந்தது. வீடு,அடுக்குமாடி குடியிருப்புகளின் விலை கணிசமாக குறைந்து விட்டன. அத்துடன் பலர் வேலை இழந்துள்ளனர்.

வீடு மதிப்பு உயரும், நல்ல வருவாயும் லாபமும் கிடைக்கும் என்று வீட்டை வாங்கியவர்கள், தற்போது கடன், மாத தவணை கொடுக்க முடியாமல் தடுமாறுகின்றனர்.

இவர்களுக்கு கடன் கொடுத்த வங்கிகளுக்கும் நெருக்கடி ஏற்பட்டுள்ளது. ஐக்கிய அரபு குடியரசில் உள்ள வங்கிகள் கொடுத்த கடனில், 35 விழுக்காடு ரியல் எஸ்டேட் துறை கடனாக உள்ளன. இவர்களுக்கு கடனுக்கு ஈடாக பெற்ற சொத்து ( வீடு) மதிப்பு, தற்போதைய நிலையில் கடனுக்கும், வட்டிக்கும் சமமாக இருக்குமா என்பது கேள்விக்குறி தான் என்று நிபுணர்கள் கூறுகின்றனர்.

கிரெடிட் சூயிசி (Credit Suisse) என்ற ஆய்வு நிறுவனத்தின் கணிப்பு படி அரபு நாடுகளில் குவைத், ஐக்கிய அரபு குடியரசை சேர்ந்த வங்கிகள் தான் ரியல் எஸ்டேட் துறைக்கு அதிக அளவு கடன் கொடுத்து உள்ளன. இந்த பிராந்தியத்தில் (மேற்கு ஆசியா) சவுதி அரேபியாவைச் சேர்ந்த வங்கிகள் தான், ரியல் எஸ்டேட் துறைக்கு குறைந்த அளவு கடன் வழங்கியுள்ளன. இவை மொத்த கடனில் 7.5 விழுக்காடு மட்டுமே ரியல் எஸ்டேட் துறைக்கு கடனாக வழங்கியுள்ளன என்று தெரிவிக்கிறது.

சென்ற வருடம் முதல் ஆறு மாத புள்ளி விபரங்களின் படி, குவைத் வங்கிகளின் மொத்த கடனில், ரியல் எஸ்டேட் துறை கடன் 31 விழுக்காடாக உள்ளது. இதை விட அதிக அளவு படி ஐக்கிய அரபு குடியரசில் உள்ள வங்கிகள் ரியல் எஸ்டேட் துறைக்கு கடன் கொடுத்திருப்பதாக சமீபத்திய கிரெடிட் சூயிசி நிறுவன மதிப்பீடு தெரிவிக்கிறது.

கிரெடிட் சூயிசி நிறுவனத்தைச் சேர்ந்த ஆய்வாளர்கள் முகம்மது ஹாவா, திக்விஜய் சிங் ஆகிய இருவரும், பெரிய நிறுவனங்கள், தனி நபர் கடனில் குறிப்பிடத்தக்க அளவு ரியல் எஸ்டேட்டில் முதலீடு செய்திருக்கின்றனர் என்று கூறியதாக “கல்ப் நியுஸ்” பத்திரிக்கை தெரிவித்துள்ளது.

ஐக்கிய அரபு குடியரசின் வங்கிகளில் வைப்பு நிதிக்கும், இவை கொடுத்த கடனுக்கான விகிதாச்சாரம் அதிக அளவு உள்ளது. இத்துடன் இவை அதிக அளவு ரியல் எஸ்டேட் துறைக்கு கடனாக கொடுத்துள்ளன. இவற்றை ஒப்பிட்டு பார்க்கும் போது, கடன் வாங்கியவர்கள், அதை திருப்பி கட்ட தவறினால் வங்கிகள் நெருக்கடியில் சிக்கும் என்று வங்கி துறையைச் சேர்ந்த நிபுணர்கள் எச்சரிக்கின்றனர்.

சர்வதேச நிதி ஆய்வு நிறுவனமான ஸ்டான்டர்ட் அண்ட் பூவர் (Standard and Poor) நிறுவனத்தைச் சேர்ந்த ஆய்வாளர் இமானுவேல் வாலண்ட் கூறும் போது, கச்சா எண்ணெய் விலை சரிவு, மந்தமான பொருளாதார வளர்ச்சி, பங்குச் சந்தை சரிவு, ரியல் எஸ்டேட் துறை விலை சரிவு போன்றவை வங்கிகளுக்கு மிகுந்த நெருக்கடியை ஏற்படுத்துகின்றன. இவற்றால் அவற்றின் வர்த்தக வளர்ச்சி பாதிக்கப்படும். சொத்துக்களின் மதிப்பு குறைந்து இலாபமும் பாதிக்கப்படும் என்று தெரிவித்தார்.

கிரெடிட் சூயிசி நிறுவனத்தின் தகவல் படி, ரிசர்வ் வங்கியின் விதிப்படி, வைப்பு நிதிக்கும் கடனுக்கும் இடையே 100% விகிதாச்சாரம் இருக்க வேண்டும். ஆனால் ஐக்கிய அரபு குடியரசின் வங்கிகளில் இந்த விகிதாச்சாரம் 122.8% என்ற அளவில் உள்ளது.

இதில் அபுதாபி கமர்சியல் வங்கியின் வைப்பு நிதிக்கும் கடனுக்கும் இடையே உள்ள விகிதாச்சாரம் 147.2% என்ற அளவில் உள்ளது. இதற்கு அடுத்த இடத்தில் எமிரேட் என்.பி.டி வங்கியின் விகிதாச்சாரம் 121.8% என்ற அளவில் உள்ளது.

ஐக்கிய அரபு குடியரசைச் சேர்ந்த வங்கிகள், கடந்த இரண்டு மாதங்களாக கடன் கொடுப்பதில் ஜாக்கிரதையாக இருக்கின்றன. இதே நிலை தொடர்ந்தால் இவற்றின் இலாபம் குறையும்.

வெப்துனியாவைப் படிக்கவும்