புது டெல்லி: மத்திய அரசு பொருளார மந்த நிலையை போக்கி, புத்துயிர் ஈட்ட இரண்டாவது தவணையாக அறிவித்துள்ள உதவிகள் ஏமாற்றம் அளிப்பதாக ஆயத்த ஆடை ஏற்றுமதி மேம்பாட்டு கவுன்சில் கூறியுள்ளது.
மத்திய அரசின் உதவி திட்டங்கள் பற்றி நேற்று திட்ட குழு துணைத் தலைவர் மான்டேக் சிங் அலுவாலியா அறிவித்தார்.
இது குறித்து ஆயத்த ஆடை ஏற்றுமதி மேம்பாட்டு கவுன்சில் [The Apparel Export Promotion Council (AEPC) ] தலைவர் ராகேஷ் வாய்ட் கூறுகையில், 10 பில்லியன் டாலர் மதிப்புள்ள ஆயத்த ஆடை ஏற்றுமதி செய்யப்படுகிறது. இதில் 39 லட்சம் பேர் வேலை பார்க்கின்றனர். ஆனால் இந்த துறைக்கு மத்திய அரசு எவ்வித உதவியும் செய்யவில்லை.
இந்த நிதி ஆண்டில் 11.62 பில்லியன் டாலர் மதிப்பிற்கு ஆயத்த ஆடைகள் ஏற்றுமதி செய்ய வேண்டும் என்று இலக்கு நிர்ணயிக்கப்பட்டுள்ளது. இதில் 24 விழுக்காடு வரை குறையும். 8.78 பில்லியன் டாலர் அளவிற்கே ஏற்றுமதி செய்ய இயலும்.
அமெரிக்கா, ஐரோப்பிய கூட்டமைப்பு நாடுகளிலும், மற்ற நாடுகளிலும் ஏற்பட்டுள்ள பொருளாதார நெருக்கடியால் லட்சக்கணக்கான தொழிலாளர்கள் வேலை இழக்கும் அபாயம் ஏற்பட்டுள்ளது.
நாங்கள் அரசு அதிகாரிகளுடன் ஆலோசனை நடத்த உள்ளோம். அரசு ஜவுளி, ஆயத்த ஆடை துறையின் நெருக்கடியை போக்க, கூடிய விரைவில் உறுதியான நடவடிக்கை எடுக்கும் என்று நம்புகின்றோம் என்று கூறியுள்ளார்.