மாஸ்கோ: இயற்கை எரிவாயுவை ஏற்றுமதி செய்யும் நாடுகளின் தலைமை அலுவலகத்தை தோஹாவில் அமைக்க முடிவு செய்யப்பட்டுள்ளது.
கச்சா எண்ணெய் ஏற்றுமதி செய்யும் நாடுகள் இணைந்து ஏற்கனவே, ஒபெக் என்ற ஒரு அமைப்பை உருவாக்கி உள்ளன. இந்த அமைப்பு கச்சா எண்ணெய் விலை ஏற்ற இறக்கத்திற்கு ஏற்ப உற்பத்தியின் அளவை நிர்ணயிக்கின்றன.
இதே போல் இயற்கை எரிவாயு உற்பத்தி செய்யும் நாடுகள் 2001 ஆம் ஆண்டு ஈரான் தலைநகர் டெக்ரானில் கூடி, இயற்கை எரிவாயு ஏற்றுமதி நாடுகளின் அமைப்பை தொடங்கின. இதில் தற்போது அல்ஜிரியா, பொலிவியா, வெனிஜீலா, புருனே, எகிப்து. இந்தோனேஷியா, ஈரான், கத்தார், லிபியா, மலேசியா, நைஜிரியா, டிரினான்ட் மற்றும் டோங்கோ, ஐக்கிய அரபு குடியரசு, ரஷியா ஆகியவை உறுப்பினர்களாக உள்ளன. புதிதாக உறுப்பினராக இணைய கினியா உறுப்பினராக சேர்வதற்கு விண்ணப்பித்துள்ளது.
இதில் நார்வே பார்வையாளராக உள்ளது.
இந்த அமைப்பின் அமைச்சர்கள் மட்டத்திலான 7 வது கூட்டம் நேற்று ரஷிய தலைநகர் மாஸ்கோவில் நடைபெற்றது.
இதில் பேசிய கத்தார் துணை பிரதமர் அப்துல்லா பின் ஹமீத் அல்-அட்டியா பேதும் போது, எரிவாயு ஏற்றுமதி நாடுகளின் அமைப்பின் தலைமையகம் தோஹாவில் அமைக்கப்படும் என்று தெரிவித்தார்.
முன்னதாக இதன் தலைமையகத்தை செயின்ட் பீட்டர்ஸ்பக் ( ரஷியா), தோஹா, டெக்ரான் ஆகிய நகரங்களில் அமைக்க ஆலோசிக்கப்பட்டது.
இதை தோஹாவில் அமைக்கப்படுவதை, ரஷிய எரிசக்தி அமைச்சர் செர்ஜி சுமாட்கோ உறுதி செய்தார். அத்துடன் இதன் விதிமுறைகள் அங்கீகரிக்கப்படும் என்று கூறினார்.
அவர் மேலும் கூறுகையில், அடுத்து நடைபெறும் கூட்டத்தில், இயற்கை எரிவாயுவை ஏற்றுமதி செய்யும் நாடுகளுக்குள். எந்த வகையில் ஒத்துழைப்பது, பொதுச் செயலாளர் தேர்ந்தெடுப்பது ஆகியவை அடுத்த கூட்டத்தில் மேற்கொள்ளப்படும்.
தற்போது இந்த அமைப்பில் கஜகஸ்தான், அழைப்பின் பேரில் பங்கு கொள்ளும் நாடாக உள்ளது. தன்னை பார்வையாளராக அங்கீகரிக்க வேண்டும் என்று கஜகஸ்தான் கேட்டுக் கொண்டது. இதன் கோரிக்கையை ஏற்று பார்வையாளர் அந்தஸ்து கொடுக்கப்பட்டுள்ளது என்று கூறினார்.