கச்சா விலை 40 டாலருக்குச் சரிவு!

சர்வதேச அளவில் சரிந்துவரும் கச்சா எண்ணெய் விலையை தடுத்து நிறுத்த தங்களது உற்பத்தியை குறைக்கப்போவதாக ஓபெக் நாடுகள் அறிவித்தும், சர்வதேச சந்தையில் கச்சா விலை பீப்பாய்க்கு 40 டாலர்களாக சரிந்துள்ளது.

அல்ஜீரியாவின் ஓரான் நகரில் நேற்று கூடிய எண்ணெய் உற்பத்தி ஏற்றுமதி நாடுகளின் கூட்டமைப்பான ஓபெக் (Oil producing and Exporting Countries - OPEC), சரிந்துவரும் கச்சா விலையைக் கட்டுப்படுத்த வரும் ஜனவரி முதல் தங்கள் அன்றாட உற்பத்தியை 22 லட்சம் பீப்பாய்கள் குறைப்பது என்று முடிவெடுத்தது.
தங்களைப் போல ஓபெக் அமைப்பிற்கு வெளியில் உள்ள நாடுகளும் உற்பத்தியை குறைக்க வேண்டும் என்று விடுத்த வேண்டுகோளையடுத்து ரஷ்யாவும், அஜர்பைஜானும் தங்கள் உற்பத்தியை நாள் ஒன்றிற்கு 3 லட்சம் பீப்பாய்கள் வரை குறைப்பது என்று அறிவித்தன.

இதனால் கச்சா விலை உயரும் என்று எதிர்பார்க்கப்பட்டது. ஆனால், அதற்கு நேர் மாறாக நியயார்க் சந்தையில் பீ்ப்பாய்க்கு 3.5 டாலர்கள் அளவிற்கு இன்று காலை விலை குறைந்தது. ஜனவரி, பிப்ரவரி மாதங்களுக்கான முன்பேர ஒப்பந்த விலைகளும் குறைந்தன.

அமெரிக்க, பிரண்ட் கச்சா விலைகள் பீப்பாய்க்கு 40 டாலர்கள் அளவிற்கு குறைந்துள்ளதெனில், இந்தியா வாங்கும் மத்திய கிழக்காசிய கச்சா விலை மேலும் குறைவாகவே கிடைக்கும்.

ஓபெக் உற்பத்தியைக் குறைப்பது என்று அறிவித்த அதே நேரத்தில் அமெரிக்கா தனது கச்சா இருப்பை அதிகரித்ததால் இந்த விலை குறைப்பு ஏற்பட்டுள்ளதாக செய்திகள் கூறுகின்றன.

இன்று ஏற்பட்டுள்ள விலைக் குறைவு கடந்த 4 ஆண்டுகளில் காணாத விலை வீழ்ச்சியாகும்.
ஓபெக் நாடுகளின் ஒரு நாள் உற்பத்தி தற்பொழுது 270 லட்சம் பீப்பாய்களாக உள்ளது. இது ஜனவரி முதல் 248 லட்சம் பீப்பாய்களாக குறைக்கப்படவுள்ளது.

ரஷ்யாவும், அஜர்பைஜானும் மேலும் 6 லட்சம் பீப்பாய் உற்பத்தி குறைப்பு செய்ய ஒப்புக்கொண்டிருப்பதால், அடுத்த ஆண்டில் கச்சா உற்பத்தி ஒட்டுமொத்தமாக 3 விழுக்காடு வரை குறையும்.

வெப்துனியாவைப் படிக்கவும்