பணவீக்கம் 6.84 % ஆக குறைவு

வியாழன், 18 டிசம்பர் 2008 (14:07 IST)
புது டெல்லி: பெட்ரோலிய பொருட்களின் விலை தொடர்ந்து குறைந்து வருவதால், ஆறாவது வாரமாக பணவீக்கம் குறைந்துள்ளது.

கடந்த ஒன்பது மாதங்களில் இல்லாத அளவிற்கு பணவீக்கம் 6.84 விழுக்காடாக குறைந்துள்ளது.

மொத்த விலை குறியீட்டு எண் அடிப்படையில் கணக்கிடப்படும் பணவீக்கம் டிசம்பர் 6 ஆம் தேதியுடன் முடிவடைந்த வாரத்தில் 6.84 விழுக்காடாக குறைந்துள்ளது.

இதற்கு முந்தைய வாரத்தில் 8 விழுக்காடாக இருந்தது.

அதே நேரத்தில் சென்ற ஆண்டு டிசம்பர் முதல் வாரத்தில் பணவீக்கம் 3.84 விழுக்காடாக இருந்தது.

அயல்நாட்டு சந்தையில் பெட்ரோலிய கச்சா எண்ணெய் விலை குறைந்ததால், மத்திய அரசு பெட்ரோல் விலையை லிட்டருக்கு ரூ.5, டீசலுக்கு ரூ.2 குறைத்துள்ளது.

மத்திய அரசின் விலை கட்டுப்பாட்டில் இல்லாத விமான பெட்ரோல், நாப்தா, உலை எண்ணெய், உயர்ரக டீசல் ஆகியவற்றின் விலையும் குறைந்துள்ளது.

இதனால் மொத்த விலை குறியீட்டு எண் அட்டவணையில் இதன் மதிப்பு குறைந்துள்ளது.

அத்துடன் பணவீக்கம் கணக்கிடப்பட்டுள்ள வாரத்தில், பழம், காய்கறி, தானியங்கள், உருக்கு, மென் இரும்பு, மற்ற உலோகங்களின் விலையும் குறைந்துள்ளது.

பணவீக்கத்தை கட்டுப்படுத்தவும், வளர்ச்சியின் மந்த நிலையை போக்கவும் ரிசர்வ் வங்கி எடுத்துள்ள நடவடிக்கையால் நிதி சந்தையில் ரூ.3 லட்சம் கோடி வரை பணப்புழக்கம் அதிகரித்துள்ளது. தொழில் துறை உற்பத்தியை அதிகரிக்கும் வகையில், ரிசர்வ் வங்கி மேலும் பல நடவடிக்கைகளை எடுக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.






வெப்துனியாவைப் படிக்கவும்