டயோட்டா உற்பத்தி குறைப்பு

புதன், 17 டிசம்பர் 2008 (18:11 IST)
குர்கான்: டயோட்டா கார் உற்பத்தி நிறுவனம், இதன் கார் உற்பத்தியை 30 விழுக்காடு குறைப்பதாக அறிவித்துள்ளது.

தற்போது ஏற்பட்டுள்ள பொருளாதார நெருக்கடி காரணமாக வாகனங்களின் விற்பனை குறைந்துள்ளது. வாகன உற்பத்தியில் ஈடுபட்டுள்ள நிறுவனங்கள், உற்பத்தியை குறைப்பதுடன், மாதத்தில் சில நாட்கள் விடுமுறை அறிவித்துள்ளன.

தற்போது டயோட்டா கிர்லோஸ்கர் மோட்டார்ஸ் நிறுவனம், விற்பனை குறைந்துள்ளதால் இந்த மாதத்தில் இருந்து கார் உற்பத்தியை 30 விழுக்காடு குறைப்பதாக அறிவித்துள்ளது.

இது குறித்து டயோட்டா கிர்லோஸ்கர் மோட்டார்ஸ் நிறுவனத்தின் மேலாண்மை இயக்குநர் ஹிரோஷி நகோகவா கூறுகையில், விற்பனை குறைந்துள்ளதால், டிசம்பர் மாதத்தில் இருந்து கார்களின் உற்பத்தியை 30 விழுக்காடு குறைக்க போகின்றோம். இதன் விற்பனை குறைந்துள்ளதால், இந்த வருட விற்பனை இலக்கை மாற்றி அமைக்க வேணடியதுள்ளது. டயோட்டா நிறுவனம் மற்ற நாடுகளில் முதலீடு செய்ய திட்டமிட்டு இருந்ததை, தற்காலிகமாக நிறுத்தி வைத்துள்ளது. இந்தியாவில் அவ்வாறு செய்யவில்லை என்று தெரிவித்தார்.

அவர் மேலும் கூறுகையில், கார்களின் விற்பனையை பொறுத்து ஜனவரி, பிப்ரவரி மாதங்களில் உற்பத்தி செய்யும் எண்ணிக்கை பற்றி முடிவு செய்யப்படும் என்று தெரிவித்தார்.

ஜப்பானைச் சேர்ந்த டயோட்டா நிறுவனமும், கிர்லோஸ்கர் நிறுவனமும் இணைந்து டயோட்டா கிர்லோஸ்கர் மோட்டார் நிறுவனத்தை தொடங்கின. இதன் விரிவாக்க பணிக்கா ரூ.3,200 கோடி முதலீடு செய்யப்படுகிறது.

இந்த நிறுவனம் 2007 ஆம் ஆண்டு 54,181 கார்களை விற்பனை செய்துள்ளது.

இது 2008 ஆம் ஆண்டில் 60 ஆயிரம் கார்களை விற்பனை செய்ய இலக்கு நிர்ணயித்துள்ளது. நவம்பர் மாதம் 2,886 கார்களை உற்பத்தி செய்துள்ளது.

இது நவம்பர் மாதம் 2,087 கார்களை விற்பனை செய்துள்ளது. இந்த எண்ணிக்கை சென்ற வருடம் நவம்பர் மாத விற்பணையுடன் ஒப்பிடும் போது 48.55 விழுக்காடு குறைவு. (சென்ற நவம்பர் விற்பனை 4,056 கார்கள்).

வெப்துனியாவைப் படிக்கவும்