ஐ.டி.சி பங்கு வாங்கலாமா?

செவ்வாய், 16 டிசம்பர் 2008 (15:52 IST)
ஐ.டி.சி நிறுவனத்தின் பங்கு விலை தற்போது ரூ.172 என்ற அளவில் உள்ளது. இதன் விலை ரூ.218 வரை உயர வாய்ப்புள்ளது. இந்த பங்குகளை வாங்கலாம்.

ஏனெனில் ஐ.டி.சி நிறுவனத்தின் சிகரெட் விற்பனையில் கிடைக்கும் வருவாயை, சிகரெட் அல்லாத மற்ற பிரிவுகளில் முதலீடு செய்து பலப்படுத்தி வருகிறது. இதன் மொத்த வருவாயில் சிகரெட் பிரிவில் இருந்து 45% கிடைக்கிறது. இந்த பிரிவில் வர்த்தகத்தில் இருந்து 80% வருவாய் கிடைக்கிறது.

பில்டர் அல்லாத சிகரெட்டிற்கு தடை விதிக்கப்பட்ட பிறகு, இதன் சிகரெட் விற்பனை, இந்த நிதி ஆண்டின் முதல் ஆறு மாதத்தில் 10.6% ( வருடாந்தி அடிப்படையில்)அதிகரித்துள்ளது. இதற்கு காரணம் பில்டர் இல்லாத சிகரெட்டை பயன்படுத்தியவர்கள், பில்டருடன் கூடிய சிகரெட் பயன் படுத்துவதாலும், இது எல்லா சிகரெட்டுகளின் விலையை அதிகரித்ததே.

அதே நேரத்தில், அரசு சிகரெட் புகைப்பதற்கு பல கட்டுப்பாடுகளை விதிப்பதால், ஐ.டி.சி நிறுவனத்தையும் பாதிக்கும் வாய்ப்பு உள்ளதல்லவா? அதனால் தான் இந்த நிறுவனம் அடுத்த ஐந்து முதல் ஏழு வருடங்களுக்குள் சிகரெட் அல்லாத மற்ற பிரிவுகளான தங்கும் விடுதி, வேளாண் பொருட்கள், நுகர்வோர் பொருட்கள் போன்றவைகளில் தன்னை பலப்படுத்த திட்டமிட்டுள்ளது.

இந்நிறுவனம், தற்போதைய பொருளாதார மந்த நிலையில், இதன் சொத்து மதிப்பு குறையும் என்று கருதுகிறது. இதனிடம் இருப்பில் உள்ள அதிக அளவு பணத்தை கொண்டு,(இந்த நிதி ஆண்டில் ரூ.5,623 கோடி) மற்ற சொத்துக்களை குறைந்த விலையில் வாங்கலாம் என்று எண்ணியுள்ளது.

பல்வேறு நாடுகளில் ஏற்பட்டுள்ள பொருளாதார நெருக்கடியால் தங்கும் விடுதிகளில் விருந்தினர்கள் தங்குவது குறைந்துள்ளது. இதன் அறைகள் காலியாக உள்ளன. அத்துடன் அறை வாடகையும் குறைந்துள்ளது. அத்துடன் சமீபத்திய மும்பை தாக்குதலால் தங்கும் விடுதி தொழில் துறையின் வருவாய் குறைந்துள்ளது.

இதனால் நட்சத்திர தங்கும் விடுதிகளை நடத்தும் நிறுவனங்களின் மொத்த சொத்து மதிப்பு குறைந்துள்ளது. இதை நல்ல வாய்ப்பாக கருதி, ஐ.டி.சி பல நட்சத்திர தங்கும் விடுதிகளை வாங்க திட்டமிட்டுள்ளது.

இதன் பங்கு விலை தற்போது ரூ.172 ஆக உள்ளது. இதன் பங்கு வருவாய் இந்த நிதி ஆண்டில் ரூ.9.1 ஆகவும், அடுத்த நிதி ஆண்டில் ரூ.10.9 ஆக இருப்பதற்கு வாய்ப்பு உள்ளது. எனவே இதன் விலை ரூ.218 வைர உயர வாய்ப்பு உள்ளது. இதனால் இதன் பங்குகளை வாங்கலாம் என்று பரிந்துரைக்கிறோம்.

தகவல்: sharekhan dot com

வெப்துனியாவைப் படிக்கவும்