புதுமைகளுடன் தொழில் வர்த்தக பொருட்காட்சி

செவ்வாய், 16 டிசம்பர் 2008 (12:59 IST)
மதுரை: பல்வேறு புதுமைகளுடன் தொழில் வர்த்தகப் பொருட்காட்சி, தமுக்கம் மைதானத்தில் வரும் 19 ஆம் தேதி தொடங்குகிறது.

இதுகுறித்து தமிழ்நாடு தொழில் வர்த்தக சங்க முதுநிலைத் தலைவர் எஸ்.ரத்தினவேலு, தலைவர் எஸ்.ஜெயபாலன் ஆகியோர் செய்தியாளர்களிடம் கூறியதாவது:

வேளாண் பொருட்கள் அடிப்படையிலான தொழிற்சாலைகளின் வளர்ச்சியே வேளாண் துறை முன்னேற்றத்திற்கு முக்கியம் என்பதை வலியுறுத்தும் நோக்கில் "தொழில் உறவே வேளாண்மைக்கு விடியல்' எனும் முழக்கத்துடன் இந்த ஆண்டு தொழில் வர்த்தக பொருள்காட்சி நடத்தப்பட உள்ளது.

இதில் 300 க்கும் மேற்பட்ட அரங்குகளில் பல்வேறு வீட்டு உபயோகப் பொருட்கள், அலுவலக சாதனங்கள், இறக்குமதி செய்யப்பட்ட பொருட்கள், உணவுப் பொருட்கள், தொழில் கருவிகள் உள்பட அனைத்துப் பொருட்களும் விற்பனை செய்யப்படும்.

சிறுதொழில் தொடங்குவதற்கான வாய்ப்புகளை விளக்குவதற்காக, கே.வி.ஐ.சி. நிறுவனம் சார்பில் அரங்கு அமைக்கப்படுகிறது. வேளாண் பொருட்கள் அடிப்படையிலான தொழில் நிறுவனங்கள் அரங்குகள் அமைக்கின்றன.

இந்த கண்காட்சியின் போது, இளம் தொழில் முனைவோரும், வணிகர்களும், மகளிரும் தொழில் வணிகத் துறையில் ஈடுபட ஊக்குவிக்கும் வகையில் மூன்று கருத்தரங்குகள் நடத்தப்பட உள்ளன.

இந்த கண்காட்சி ஜனவரி 5 ஆம் தேதி வரை 18 நாட்கள் மாலை 4 மணி முதல் 9 மணி வரை, விடுமுறை நாள்களில் காலை 11 மணி முதல் இரவு 9 மணி வரை நடைபெறும் என்று தெரிவித்தனர்.

வெப்துனியாவைப் படிக்கவும்