விமான பெட்ரோல் விலை குறைப்பு

திங்கள், 15 டிசம்பர் 2008 (17:58 IST)
புது டெல்லி: பொதுத்துறை பெட்ரோலிய நிறுவனங்கள் விமான பெட்ரோலின் விலையை 11 விழுக்காடு குறைத்துள்ளன.

பெட்ரோலிய நிறுவனங்கள் கடந்த செப்டம்பர் மாதம் முதல் ஏழு தடவை விமான பெட்ரோல் விலை குறைத்துள்ளன என்பது குறிப்பிடத்தக்கது.

இன்று நள்ளிரவு முதல் 1 கிலோ லிட்டர் விமான பெட்ரோல் விலை ரூ.4,208.37 பைசா குறைக்கப்படும். இதன் விலை ரூ32,691.28 ஆக டில்லியில் இருக்கும் என்று இந்தியன் ஆயில் கார்ப்பரேஷன் அதிகாரிகள் தெரிவித்தனர்.

கடந்த ஆகஸ்ட் மாதத்தில் டில்லியில் 1 கிலோ லிட்டர் விமான பெட்ரோலின் விலை ரூ.71,028.26 பைசாவாக இருந்தது. உலக சந்தையில் பெட்ரோலிய கச்சா எண்ணெய் விலை சரிந்ததை தொடர்ந்து, உள்நாட்டிலும் விமான பெட்ரோல் விலை படிப்படியாக குறைக்கப்பட்டது.

மத்திய அரசின் விலை நிர்ணய கட்டுப்பாட்டில், விமான பெட்ரோல் விலை இல்லை. இதன் விலை கச்சா எண்ணெய் விலையை பொருத்து நிர்ணயிக்கப்படுகிறது.

இந்தியாவில் அதிக அளவு விமான போக்குவரத்து உள்ள மும்பையில் 1 கிலோ லிட்டர் விமான பெட்ரோல் விலை ரூ.33,719.46 பைசாவாக இருக்கும். இதன் விலை முன்பு ரூ.38,103.19 பைசாவாக இருந்தது.

இந்தியன் ஆயில் கார்ப்பரேஷன், பாரத் பெட்ரோலியம், ஹிந்துஸ்தான் பெட்ரோலியம் ஆகியவை சந்தை நிலவரத்தை பொறுத்து, ஒவ்வொரு மாதமும் முதல் தேதியும், 16 ஆம் தேதியும் விலைகளை மாற்றி அறிவிக்கின்றன.

இதன் விலை முந்தைய பதினைந்து தினங்களில் இருந்த விலை கணக்கிட்டு, அதன் சராசரி விலையின் அடிப்படையில் நிர்ணயிக்கப்படுகிறது.

இந்த மூன்று பெட்ரோலிய நிறுவனங்களும், இந்த மாத தொடக்கத்தில் விமான பெட்ரோல் விலையை 1 கிலோ லிட்டருக்கு ரூ.2,480 குறைத்தன.

வெப்துனியாவைப் படிக்கவும்