நிதி பற்றாக்குறை கவலை இல்லை-சிதம்பரம்

வெள்ளி, 12 டிசம்பர் 2008 (17:56 IST)
புது டெல்லி: இந்த வருடம் நிதி பற்றாக்குறை மூன்று விழுக்காட்டை தாண்டினால் கூட, அது கவலைப் படக்கூடிய விஷயமல்ல என்று மத்திய உள்துறை அமைச்சர் ப.சிதம்பரம் தெரிவித்தார்.

மும்பையில் சமீபத்திய பயங்கரவாதிகளின் தாக்குதலை தொடர்ந்து நிதி அமைச்சராக இருந்த சிதம்பரம், உள்துறை அமைச்சராக மாற்றப்பட்டார். இவரிடம் இருந்து நிதித்துறை, தற்போது பிரதமர் மன்மோகன் சிங் வசம் உள்ளது.

இன்று கேள்விநேரத்தின் போது, மக்களவையில் பிரதமர் மன்மோகன் சிங்கிற்கு பதிலாக பதிலளித்த சிதம்பரம், நாங்கள் 4.5 விழுக்காடாக இருந்த நிதி பற்றாக்குறையை 2.5 விழுக்காடாக குறைத்தோம். தற்போதய உலக அளவிலான நிதி நெருக்கடியில், இந்தியாவின் நிதி பற்றாக்குறை 3 விழுக்காட்டிற்கு மேல் அதிகரித்தாலும் கூட, இது கவலைபட வேண்டிய விஷயமல்ல என்று தெரிவித்தார்.

மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி உறுப்பினர் ரூப்சந்த் பால், நிதி நிர்வாக பொறுப்பு மற்றும் நிதி நிலை மேலாண்மை சட்டத்திற்கும் அதிகமாக செலவழிப்பவதற்கு ஏற்றவாறு திருத்தம் கொண்டு வரவேண்டும் என்று தெரிவித்த ஆலோசனையை, நிதி அமைச்சர் நிராகரித்தார்.

இதற்கு பதிலளித்து பேசுகையில், இது சரியான நடவடிக்கை அல்ல. சரியான முறையில் அரசின் செலவுகள் இருக்க வேண்டும் என்பதற்காக, நிதி நிர்வாக பொறுப்பு மற்றும் நிதி நிலை மேலாண்மை சட்டம் கொண்டுவரப்பட்டது. இந்த சட்ட வரம்புகளை மீறினால், நாடாளுமன்றத்திற்கு பதில் சொல்லும் சூழ்நிலை ஏற்படும். இந்த சட்டம் நீண்ட கால நடவடிக்கைகளை கருத்தில் கொண்டு அறிமுகப்படுத்தப்பட்டது என்று சிதம்பரம் கூறினார்.

அயல்நாட்டு கடன் அதிகரிப்பது குறித்த துணை கேள்விக்கு சிதம்பரம் பதிலளிக்கையில், இந்தியாவின் அயல்நாட்டு கடன் மற்ற நாடுகளுடன் ஒப்பிடுகையில் குறைவாக இருக்கிறது.

பிரிட்டனின் அயல்நாட்டு கடன், அதன் உள்நாட்டு மொத்த உற்பத்தி மதிப்பில் 425 விழுக்காடாக உள்ளது. அதே நேரத்தில் இந்தியாவின் அயல்நாட்டு கடன், மொத்த உள்நாட்டு உற்பத்தி மதிப்பில் 18.9 விழுக்காடு மட்டுமே உள்ளது.

இந்தியாவின் உள்நாட்டு, அயல் நாட்டு கடன் அதிகரிப்பதை ஒட்டி, நிதி பற்றாக்குறையும் அதிகரிக்கிறது.

மத்திய அரசு அயல்நாட்டு கடன்களை நிர்வகிப்பதில் சிறந்த கொள்கைகளை கடை பிடிக்கிறது. இதனால் அயல்நாட்டு கடன் சிறப்பாக நிர்வகிக்க முடிகிறது.

மத்திய அரசு நீண்ட காலம் திருப்பி கொடுக்கும் வகையில் குறைந்த வட்டியில் கடன் வாங்குகிறது. குறுகிய கால கடன்களை கண்காணிக்கிறது. அதிக வட்டிக்கு வாங்கிய கடனை, அதன் காலம் முடிவடதற்கு முன்பே திரும்ப வழங்குகிறது என்று கூறினார்.

வெப்துனியாவைப் படிக்கவும்