நெருக்கடியில் ஜப்பான் பொருளாதாரம்

புதன், 10 டிசம்பர் 2008 (14:12 IST)
லண்டன்: ஜப்பான் பொருளாதாரமும் நெருக்கடியில் சிக்கியுள்ளது.

உலக அளவில் பொருளாதார பலத்தில், அமெரிக்காவிற்கு அடுத்தபடியாக இரண்டாவது இடத்தில் ஜப்பான் உள்ளது. அதே நேரத்தில் அதிக அளவு ஏற்றுமதி செய்யும் நாடாகவும் ஜப்பான் விளங்குகிறது.

அமெரிக்கா, ஐரோப்பா, ஆசிய நாடுகளில் ஏற்பட்டுள்ள பொருளாதார, நிதி நெருக்கடி ஜப்பானையும் பெருமளவு பாதித்துள்ளது.

இந்த ஆண்டின் மூன்றாவது காலாண்டில் ஜப்பான் உள்நாட்டு மொத்த உற்பத்தி 0.5 விழுக்காடு குறைந்துள்ளதாக ஜப்பான் அதிகாரபூர்வமாக அறிவித்துள்ளது

இந்த ஆண்டு மூன்றாவது காலாண்டில் உள்நாட்டு மொத்த உற்பத்தி 0.1 விழுக்காடு மட்டுமே குறையும் என்று மதிப்பிடப்பட்டது. ஆனால் இதை விட அதிக அளவு பாதிப்பு உண்டாகியுள்ளது.

ஜப்பான் அமைச்சரவை அலுவலகம் வெளியிட்டுள்ள புள்ளி விபரப்படி, முன்றாவது காலாண்டுக்கான உள்நாட்டு மொத்த உற்பத்தி 0.5 விழுக்காடு குறைந்துள்ளது. இந்த ஆண்டு ஜீலை முதல் செப்டம்பர் வரையிலான, காலாண்டு உற்பத்தி குறைவையும் கணக்கில் எடுத்துக் கொண்டால் ஆண்டு உற்பத்தி இழப்பு 1.8 விழுக்காடாக அதிகரித்துள்ளது.

உலக அளவு அதிக அளவு பொருளாதார வளம் உள்ள நாடுகளான அமெரிக்கா, ஜெர்மனி, சிங்கப்பூர், இத்தாலி உட்பட பல நாடுகள் ஏற்கனவே நெருக்கடி ஏற்பட்டுள்ளது. இப்போது ஜப்பானும் தொடர்ந்து உள்நாட்டு மொத்த உற்பத்தி குறைந்து வருவதாக அறிவித்துள்ளது. இந்த நாடுகளில் நிதி நெருக்கடி ஏற்பட்டுள்ளதுடன், தொழில், வர்த்தக நிறுவனங்களுக்கு கடன் கிடைப்பதிலும் சிக்கல் உண்டாகியுள்ளது.

மக்களின் வாங்கும் சக்தி குறைந்திருப்பதால், உற்பத்தி பொருட்கள் விற்பனை ஆகாமல் தேங்கி கிடக்கின்றன. இதனால் நெருக்கடி மேலும் அதிகரிக்கிறது.

ஜப்பானின் முன்னணி நிறுவனங்களான வாகன தயாரிப்பில் ஈடுபட்டுள்ள டயோட்டாவும், மின்னணு பொருட்களை தயாரிக்கும் சோனி நிறுவனமும், அடுத்த வரும் மாதங்களில் வருவாய் குறையும் என்று அறிவித்துள்ளன.

சோனி நிறுவனம் 8 ஆயிரம் பேரை வேலையில் இருந்து நீக்குவதாக அறிவித்துள்ளது. இதனால் 100 பில்லியன் யென் ( 1.1 பில்லியன் அமெரிக்க டாலர்) மீதப்படுத்த முடியும் என்று கூறியுள்ளது.

நெருக்கிடியில் உள்ள பொருளாதாரத்தற்கு புத்துயிர் ஊட்டும் வகையில், ஜப்பான் அரசு 216 பில்லியன் டாலர் அளவிற்கு பல்வேறு சலுகைகளை அறிவித்துள்ளது.

வெப்துனியாவைப் படிக்கவும்