பயங்கரவாதிகள் தாக்குதலுக்கு- காப்பீடு

புதன், 3 டிசம்பர் 2008 (16:30 IST)
புது டெல்லி: மும்பையில் பயங்கரவாதிகளின் தாக்குதலை அடுத்து, பயங்கரவாதிகள் தாக்குதலால் ஏற்படும் இழப்புக்கு நஷ்ட ஈடு வழங்கும் வகையில் காப்பீடு திட்டம் ஏற்படுத்தப்படுகிறது.

காப்பீடு துறையை கண்காணிக்கும், “இர்ட“ என்று அழைக்கப்படும் காப்பீடு ஒழுங்குமுறை மற்றும் மேம்பாட்டு ஆணையத்தின் [Insurance Regulation & Development Authority(IRDA) ] முயற்சியால் அமைக்கப்படுகிறது. இந்த காப்பீடு ரூ.750 கோடி மூலதன நிதியுடன் தொடங்கப்படும்.

இன்று பிக்கி என்று அழைக்கப்படும் இந்திய தொழில் வர்த்தக சங்கங்களின் கூட்டமைப்பு ஏற்பாடு செய்திருந்த காப்பீடு கருத்தரங்கில் பேசும் போது, இர்டா சேர்மன் ஜே.ஹரி நாராயண் கூறுகையில், இர்டாவின் முயற்சியால் உண்டாக்கப்படும் பயங்கரவாதிகளின் தாக்குதலுக்கு ஏற்படும் பொருள் இழப்புக்கு (உயிர் இழப்பு அல்ல) நஷ்ட ஈடு வழங்கும் வகையில் காப்பீடு திட்டம் அறிமுகப்படுத்தப் படுகிறது. இதில் இருந்து காப்பீடு நிறுவனங்கள் நஷ்ட ஈடு வழங்க உதவியாக இருக்கும் என்று தெரிவித்தார்.

அவர் மேலும் கூறுகையில், பயங்கரவாதிகளின் தாக்குதலுக்கு எதிரான காப்பீடு திட்டங்களை மேம்படுத்த வேண்டும். இந்த திட்டத்திற்கு தகுந்தாற்போல் காப்பீடு கட்டணம் நிர்ணயிப்பது பற்றி தொழில் துறை கருத்து தெரிவிக்க வேண்டும்.

காப்பீடு நிறுவனங்கள் அவைகளின் மிக முக்கியமான அலுவல் தவிர மற்ற அலுவல்களை அயல் அலுவலக பணி மூலம் நிறைவேற்றிக் கொள்ளுதல், இணைய தளத்தின் மூலம் காப்பீடு விற்பனை, தவணை தொகையை செலுத்துதல் ஆகியவற்றை அனுமதிப்பது பற்றி இர்டா ஆலோசித்து வருகிறது.

இந்த வருடம் 288 புதிய காப்பீடு திட்டங்களுக்கு அனுமதி அளித்துள்ளது. இதன் மூலம் பலவகையான விபத்து காப்பீடு திட்டங்கள் அறிமுகப்படுத்தபட்டுள்ளது.

காப்பீடு பாலிசியின் அடிப்படையில் நஷ்டஈடு கோரிக்கைகளில் 70 விழுக்காடு கோரிக்கை மட்டுமே நஷ்டஈடு வழங்கப்படுகின்றன. மீதம் உள்ள 30 விழுக்காடு கோரிக்கைகளில், காப்பீடு நிறுவனங்களின் நிர்வாக நடைமுறைகளால் 40 விழுக்காடு கோரிக்கைகளுக்கு நஷ்டஈடு வழங்கப்படாமல் உள்ளது என்று கூறினார்.

வெப்துனியாவைப் படிக்கவும்