பணப்புழக்கத்தை அதிகரிக்க தைரியமான நடவடிக்கை-ரத்தன் டாடா

செவ்வாய், 2 டிசம்பர் 2008 (13:28 IST)
பல்வேறு நாடுகளில் ஏற்பட்டுள்ள பொருளாதார, நிதி நெருக்கடிக்கு தீர்வு காண, அரசுகள் தேவையான பணப் புழக்கத்தை ஏற்படுத்துவதுடன், நியாயமான வட்டியில் கடன் கொடு‌க்க தைரியமாக நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று ரத்தன் டாடா கூறியுள்ளார்.

அமெரிக்கா செய்தி தொலைகாட்சியான சி.என்.என் செய்தியாளர் ஃப்ரிட் ஜகாரியாவிற்கு அளித்த பேட்டியில் இவ்வாறு கூறினார்.

அவர் மேலும் கூறுகையில், வங்கிகளில் அரசுகள் பணத்தை புழக்கத்தில் விடுவதுடன், இது நுகர்வோருக்கு கடன் கிடைப்பதற்கான நடவடிக்கையும் எடுக்க வேண்டும் என்றார்.

பல நாடுகளில் ஏற்பட்டுள்ள பொருளாதார மந்தத்தையும், வளர்ச்சி பாதிப்பையும், இந்தியா எவ்வாறு சமாளிக்கப்போகிறது என்ற கேள்விக்கு ரத்தன் டாடா பதிலளிக்கையில், மேற்கு நாடுகள் (அமெரிக்கா, ஐரோப்பிய நாடுகள்) பாதிக்கப்பட்டுள்ள அளவிற்கு, இந்தியாவின் பொருளாதாரம் பாதிக்காது என்று நினைக்கின்றேன்.

இந்திய நிதி சந்தையில் அரசு போதுமான முதலீடு செலுத்தி, கடன் கிடைக்க செய்தால், நாங்கள் உள்நாட்டு பொருளாதார நிலைமைக்கு தகுந்த மாதிரி, அதிக பாதிப்பு இல்லாமல் பொருளாதாரத்திற்கு புத்துயிர் ஊட்டுவோம்.

இந்தியாவில், மற்ற நாடுகளை போன்று வீடு அடமான கடன் நெருக்கடியோ அல்லது திவாலா ஆகும் நிலைமையோ இல்லை. இந்தியாவின் பொருளாதாரம் தேவையான அளவு வளர்ச்சி அடைவதற்கு தகுந்தாற் போல், உள்நாட்டு தேவைகள் உள்ளது என்று ரத்தன் டாடா கூறினார்.

வெப்துனியாவைப் படிக்கவும்