இந்திய தொழில் கூட்டமைப்பின் மதுரை மண்டலம் சார்பில் ஸ்பீடு -2008 தேசிய அளவிலான கருத்தரங்கம் நடைபெற உள்ளது.
இது பற்றி இந்திய தொழில் கூட்டமைப்பின், மதுரை மண்டலத் தலைவர் ஆர்.தினேஷ், கருத்தரங்கத் தலைவரும் தியாகராஜர் ஆலையின் மேலாண்மை இயக்குநருமான கருமுத்து தி.கண்ணன் ஆகியோர் கூறுகையில்,
பொருளாதார மேம்பாட்டின் மூலம் தென் மாவட்டங்களின் வளர்ச்சிக்கு வித்திடும் வகையில் "ஸ்பீடு-2008' எனும் தேசிய அளவிலான தொழில் மேம்பாட்டுக் கருத்தரங்கம் நடைபெற உள்ளது.
இந்த கருத்தரங்கம் பாண்டியன் ஹோட்டலில் டிச 5,6 ஆகிய இரண்டு நாட்கள் நடைபெறும். இந்த கருத்தரங்கின் முதல் நாள் நிகழ்ச்சியின்போது, பல்வேறு நாடுகளில் சில குறிப்பிட்ட தளங்களில் ஏற்பட்டுள்ள பொருளாதார வளர்ச்சிக்கான காரணிகள் குறித்து விவாதிக்கப்படும்.
இரண்டாம் நாள் நிகழ்ச்சியில் தொழில்துறை மேம்பாடு குறித்து விவாதம் நடைபெறும்.
இந்த கருத்தரங்கில் தொழில்துறை, தகவல் தொழில்நுட்பம், மருத்துவம், சுற்றுலா ஆகியன முக்கிய கருத்துகளாக எடுத்து விவாதிக்கப்பட உள்ளது. தொழில் வாய்ப்பு தொடர்பாக அறிக்கையும், சி.டி.யும் வெளியிடப்படும்.
கருத்தரங்கை தமிழக அரசு முதன்மைச் செயலர் கே.எஸ்.ஸ்ரீபதி தொடங்கிவைக்கிறார். இதில் தொழில்துறை, தகவல் தொழில்நுட்பத் துறை, சுகாதாரத் துறை ஆகியவற்றின் மாநில அரசுச் செயலர்களும், பல்வேறு தொழில்துறை வல்லுநர்களும் பங்கேற்கின்றனர்.
மதுரை சுற்றுலா தலங்களின் கேந்திரமாக இருந்து வருவதால் தொழில்துறையானது, தென் மாவட்டத்தில் ஊக்குவிக்கப்பட வேண்டும்.
இதற்காக, மதுரை விமான நிலையத்தை சர்வதேச விமான நிலையம் என்பதற்கான அரசு அறிவிக்கையை விரைவில் வெளியிட வேண்டும்.
இங்கிருந்து இலங்கை, மேற்கு ஆசியா, சிங்கப்பூர் உள்ளிட்ட நாடுகளுக்கு விமானங்களை இயக்குவதற்கு தனியார் விமான நிறுவனங்கள் மிகுந்த ஆர்வமாக உள்ளன.
சர்வதேச விமான நிலையம் இருந்தால் மட்டுமே பல்வேறு பெரு முதலீட்டு நிறுவனங்கள், தங்களது நிறுவனங்களை தென் மாவட்டப் பகுதிகளில் தொடங்குவதற்கு முன்வரும். இதுகுறித்து இக்கருத்தரங்கில் வலியுறுத்தப்படும் என்று தெரிவித்தனர்.