தஞ்சை: தமிழகத்தில் பெய்து வரும் மழையால் 2 லட்சத்திற்கும் அதிகமான பரப்பில் உள்ள நெற்பயிர்கள் பாதிக்கப்பட்டுள்ளது என அதிகாரபூர்வமாக அறிவிக்கப்பட்டுள்ளது.
காவிரி பாசன பகுதிகளில் 2 லட்சத்து 6 ஆயிரம் ஹெக்டேர் பரப்பில் பயிரிடப்பட்டு இருந்த தாளடி, சம்பா நெற் பயிர்கள் தண்ணீரில் மூழ்கியுள்ளன.
தஞ்சை, கும்பகோனம், திருவையாறு, திருவிடைமருதூர், ஒரத்தநாடு ஆகிய தாலுகாக்களில் உள்ள நெற் பயிர்கள் தண்ணீரில் மூழ்கியுள்ளன.
தஞ்சை மாவட்டத்தில் மட்டும் சுமார் 47 ஆயிரம் ஹெக்டேர் பயிர்கள் தண்ணீரில் மூழ்கியுள்ளன என்று தஞ்சை மாவட்ட ஆட்சியர் எம்.எஸ்.சண்முகம் தெரிவித்தார்.
நாகப்பட்டினம் மாவட்டத்தில் 74,200 ஹெக்டேர் நெற்பயிர்கள் தண்ணீரில் மூழ்கியுள்ளன என்று மாவட்ட ஆட்சியர் ஜெயராமன் தெரிவித்தார்.
அவர் மேலும் கூறுகையில், தென் புத்தாறு, வடக்கு புத்தாறு, முடிகொண்டான் ஆறு ஆகியவைகளில் தண்ணீர் பெருக்கெடுத்து ஓடுகின்றன என்று தெரிவித்தார்.