பிரிட்டனில்: வாட் வரி குறைப்பு!

செவ்வாய், 25 நவம்பர் 2008 (13:14 IST)
லண்டன்: பிரிட்டனில் பொருளாதார நெருக்கடிக்கு தீர்வு காண, பிரிட்டன் அரசு 12.5 பில்லியன் பவுண்டிற்கு வரியைக் குறைத்துள்ளது.

பிரிட்டன் சான்சலர் அலிஸ்டர் டார்லிங் நேற்று மதிப்பு கூட்டு வரியை 17.5 விழுக்காட்டில் இருந்து 15 விழுக்காடக குறைப்பதாக அறிவித்தார். இந்த வரி குறைப்பு பற்றிய தகவல் பட்ஜெட் தாக்கல் செய்யப்படுவதற்கு முன் அறிவிக்கப்பட்டுள்ளது.

பிரிட்டனில் தற்போதுதான் முதன் முறையாக மதிப்பு கூட்டு வரி குறைக்கப்பட்டுள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.

வரியை அரசு குறைப்பதால், மக்களிடம் அதிக பணம் புழங்கும் அவர்கள் செலவழிப்பதும் உயரும்.

அதே நேரத்தில் வருடத்திற்கு 1 லட்சத்து 50 ஆயிரம் பவுண்டிற்கு மேல் வருவாய் உள்ளவர்களுக்கு 45 விழுக்காடு வரி விதிக்கப்படும். இந்த வரி அடுத்த தேர்தலுக்கு பிறகு அறிமுகப்படுத்தப்படும் என்று சான்சலர் அலிஸ்டர் டார்லிங் அறிவித்துள்ளார்.

இந்த வரி குறைப்பு நடவடிக்கையை வரவேற்ற பிரிட்டன் பிரதமர் கார்டன் பிரவுன், பிரிட்டன் தொழில் கூட்டமைப்பு ஏற்பாடு செய்திருந்த நிகழ்ச்சியில் பேசுகையில், இதனை தவறான நடவடிக்கையாக கருதவில்லை. இது பொறுப்புள்ள அரசு எடுக்க வேண்டிய நடவடிக்கையே என்று கூறினார்.

அவர் மேலும் பேசுகையில், இப்போது எந்த நடவடிக்கையும் அரசு எடுக்கவில்லை என்று குறை கூறுபவர்கள், 80 - 90 ஆம் ஆண்டுகளில் நெருக்கடி ஏற்பட்ட போது. மக்களின் அடமான கடன் அல்லது அவர்களின் வேலையில்லா பிரச்சனை பற்றி எந்த நடவடிக்கையும் எடுக்காமல், மக்களை நிர்கதியாக தவிக்க விட்டனர்.

இதில் மறைப்பதற்கு ஒன்றும் இல்லை. அரசு எடுத்துள்ள நடவடிக்கைகள் பற்றி மக்களுக்கு தெளிவாகத் தெரியும். பொருளாதாரம் வளர்ச்சி அடைவதால், வர்த்தகம் அதிகரிக்கும். இதனால் வேலை இழப்பை தவிர்க்க முடியும் என்று பிரவுன் கூறினார்.

வெப்துனியாவைப் படிக்கவும்