பாமாயில் இறக்குமதி வரிக்கு எதிர்ப்பு!

செவ்வாய், 25 நவம்பர் 2008 (12:25 IST)
மும்பை: அந்நிய நாடுகளில் இருந்து இறக்குமதி செய்யப்படும் பாமாயிலுக்கு இறக்குமதி வரி விதிக்க கூடாது என்று வனஸ்பதி தயாரிப்பாளர்கள் கூறி உள்ளனர்.

சர்வதேச சந்தையில் சமையல் எண்ணெய் விலை குறைந்துள்ளது. இதனால் இறக்குமதி செய்யப்படும் சமையல் எண்ணெய்க்கு, குறிப்பாக பாமாயிலுக்கு இறக்குமதி வரி விதிக்க வேண்டும் என்று சமையல் எண்ணெய் உற்பத்தியாளர்கள் வலியுறுத்தி வருகின்றனர்.

இந்நிலையில் பாமாயிலுக்கு இறக்குமதி வரி விதிக்க கூடாது என்று வனஸ்பதி உற்பத்தியாளர்கள் கூறியுள்ளனர்.

மத்திய அரசு சமீபத்தில் இறக்குமதி செய்யப்படும் சுத்திகரிக்கப்படாத சோயா எண்ணெய்க்கு 20 விழுக்காடு இறக்குமதி வரி விதித்துள்ளது அதே நேரத்தில் சுத்திகரிக்கப்பட்ட சோயா எண்ணெய்க்கு 7.5 விழுக்காடு இறக்குமதி வரி விதிக்கப்படுகிறது. இதனால் இறக்குமதி செய்யப்படும் சுத்திகரிக்கப்பட்ட சோயா எண்ணெய் விலையை விட, சுத்திகரிக்கப்படாத சோயா எண்ணெய் விலை அதிகமாக இருக்கிறது. இதனால் உள்நாட்டு சமையல் எண்ணெய் சுத்திகரிப்பு ஆலைகள் பாதிக்கப்பட்டுள்ளன.

இந்நிலையில் பாமாயிலுக்கு இறக்குமதி விதிப்பதற்கு, உள்நாட்டு வனஸ்பதி உற்பத்தியாளர்கள் எதிர்ப்பு தெரிவித்துள்ளனர்.

இந்திய வனஸ்பதி உற்பத்தியாளர்கள் சங்கம், வனஸ்பதி தயாரிப்பாளர் சங்கம் ஆகிய இரு அமைப்புகளும், மத்திய உணவு மற்றும் வேளாண் அமைச்சகத்திடம், பாமாயிலுக்கு இறக்குமதி வரி விதிக்க கூடாது என்று கூறியுள்ளனர்.

சமீபத்தில் சுத்திகரிக்கப்படாத சோயா எண்ணெய்க்கு வரி விதிக்கப்பட்டாதால், வியாபாரிகளே இலாபம் அடைந்துள்ளனர். இதனால் விவசாயிகளுக்க எவ்வித பயனும் இல்லை என்று சுட்டிக் காட்டியுள்ளனர்.





வெப்துனியாவைப் படிக்கவும்