புது டெல்லி: பல்வேறு நாடுகளில் ஏற்பட்டுள்ள பொருளாதார நெருக்கடியால், பொருளாதார வளர்ச்சி குறையும் என்ற நிலை இருப்பினும், இந்தியாவில் நெருக்கடி ஏற்படுவதற்கு வாய்ப்பு இல்லை என்று மத்திய நிதி அமைச்சர் ப.சிதம்பரம் கூறினார்.
புது டெல்லியில் இன்று பொருளாதார செய்தி ஊடக ஆசிரியர்களின் வருடாந்திர மாநாட்டை சிதம்பரம தொடங்கி வைத்தார். அப்போது அவர் பேசும் போது, இந்த வருடம் ஆகஸ்ட் மாதத்தில் பணவீக்கம் 12.91 விழுக்காடாக இருந்தது. நவம்பர் இரண்டாவது வாரத்தில் 8.90 விழுக்காடாக குறைந்துள்ளது. எனவே பணவீக்கம் அதிகரிக்கும் பிரச்சனை தீர்ந்தது என்று நம்புகின்றேன். இதே மாதிரி குறைந்தால் வட்டி விகிதம் அதிகரிக்காமல் இருக்கும். வளர்ச்சி அடைவதற்கான வாய்ப்பு உள்ளது என்றார். நாடு நெருக்கடியான சுழ்நிலையில் உள்ளது என்பதை ஏற்றுக் கொண்ட சிதம்பரம், இதை எதிர்கொள்ள அரசு உள்கட்டமைப்பு துறைக்கு செலவழிப்பதை அதிகரிக்கும் என்று கூறினார்.