உலக வர்த்தக அமைப்பு பேச்சுவார்த்தை தீர்வு காண முடிவு!
திங்கள், 24 நவம்பர் 2008 (12:06 IST)
லிமா (பெரு): உலக வர்த்தக அமைப்பின் பேச்சு வார்த்தையில் ஏற்பட்டுள்ள தடையை நீக்க முயற்சி மேற்கொள்வது என ஆசிய-பசிபிக் பிராந்தியத்தைச் சேர்ந்த 21 நாட்டு தலைவர்கள் முடிவு எடுத்துள்ளனர்.
தென் அமெரிக்காவில் (லத்தீன் அமெரிக்கா) உள்ள பெரு நாட்டின் தலைநகர் லிமாவில் ஆசிய-பசிபிக் பொருளாதார ஒத்துழைப்பு அமைப்பின் [Asia-Pacific Economic Cooperation (APEC)] கூட்டம் நேற்று தொடங்கியது.
இதில் தற்போது ஏற்பட்டுள்ள பொருளாதார, நிதி நெருக்கடிகளை சமாளிக்கும் வகையில், அடுத்த மாதம் நடைபெறும் உலக வர்த்தக அமைப்பின் தோஹா பேச்சுவார்த்தையில், வர்த்தக உடன்பாடு ஏற்படுவதற்கு தடையாக உள்ளவற்றை நீக்க முயற்சி மேற்கொள்வது என்று 21 நாட்டு தலைவர்களும் முடிவு செய்தனர்.
இதன் முதல் நாள் கூட்டத்திற்கு பிறகு வெளியிட்டுள்ள அறிக்கையில், உலக வர்த்தக அமைப்பில், வர்த்தக உடன்பாடு ஏற்படுவதற்கு, இது வரை நடைபெற்றுள்ள பேச்சுவார்த்தையில் ஏற்பட்டுள்ள முன்னேற்றத்தின் அடிப்படையில் இறுதி உடன்பாடு காண்பதற்கு முயற்சி மேற்கொள்வது.
இதில் உடன்பாடு எட்டும் வகையில் உலக வர்த்தக அமைப்பில் உள்ள நாடுகளுடன் நாங்களும், (தலைவர்கள்) எங்களது அமைச்சர்களும் தொடர்ந்து முயற்சி மேற்கொள்வோம்.
இதற்காக ஜெனிவாவில் அடுத்த மாதம் அமைச்சர்கள் அளவிலான கூட்டம் நடத்த வேண்டும்.
தற்போது ஏற்பட்டுள்ள பொருளாதார நெருக்கடிக்கு, அடுத்த 18 மாதங்களில் தீர்வு காண முடியும் என்று அறிக்கையில் கூறப்பட்டுள்ளது.