தென்காசி: செங்கோட்டையில் வணிக வரி உயர்வைக் கண்டித்து வர்த்தக சங்கத்தினர் கடையடைப்பு போராட்டத்தில் ஈடுபட்டனர்.
செங்கோட்டை நகராட்சியில் வணிக நிறுவனங்களுக்கு 150 விழுக்காடு, வீடுகளுக்கு 25 விழுக்காடு வரியை உயர்த்தி அண்மையில் நடைபெற்ற நகர்மன்றக் கூட்டத்தில் தீர்மானம் நிறைவேற்றப்பட்டது.
அப்போதே இந்த தீர்மானத்திற்கு மன்ற உறுப்பினர்கள் சிலர் கடும் எதிர்ப்புத் தெரிவித்தனர்.
இந்நிலையில், புதிய வரி விகிதப்படி, தற்போது நகராட்சி ஊழியர்கள் வரி வசூலித்து வருகின்றனர்.
இதற்கு எதிர்ப்புத் தெரிவித்து செங்கோட்டை வர்த்தக சங்கம் சார்பில் வியாழக்கிழமை கடையடைப்பு போராட்டம் நடைபெற்றது.
இதற்கு ஆதரவு தெரிவித்து, நகரில் உள்ள அனைத்துக் கடைகளும் அடைக்கப்பட்டிருந்தன.