கடலூர்: கடலூர் சிப்காட் தொழிற்பேட்டையில் புதிதாக ரசாயன ஆலைகள் தொடங்குவதற்கு, ஊராட்சி ஒன்றியக் குழு கூட்டத்தில் உறுப்பினர்கள் எதிர்ப்பு தெரிவித்தனர்.
கடலூர் ஊராட்சி ஒன்றியக் குழு கூட்டம், தலைவர் சாந்தி பஞ்சமூர்த்தி தலைமையில் சென்ற புதன்கிழமை நடந்தது.
அதில் கடலூர் சிப்காட் வளாகத்தில் டாக்ரோஸ் ரசாயனத் தொழிற்சாலை, குடிகாடு ஊராட்சியில் பாலிஷிங், என்கிரேவிங், ஃபினிஷிங் தொழிற்சாலைகள் ஆகியவற்றுக்கு, கட்டுமான அனுமதி கோரும் தீர்மானங்கள் மன்றத்தில் விவாதத்துக்கு வந்தன.
இந்த ஆலைகளுக்கு உறுப்பினர்கள் கடும் எதிர்ப்பு தெரிவித்தனர்.
இந்த ஆலைகள் ஆபத்தை விளைவிக்கக் கூடியவை. எனவே அப்பகுதி மக்களின் கருத்தறிந்த பின்னரே தீர்மானம் நிறைவேற்ற வேண்டும் என்று உறுப்பினர்கள் கோரினர்.
ரசாயனத் தொழிற்சாலைகளின் மாசுக்களால் பெண்கள் உள்ளிட்டோருக்கு பாதிப்புகள் ஏற்படுகின்றன. எனவே ஒன்றியக் குழு உறுப்பினர்கள், அதிகாரிகள் கொண்ட குழுவை அமைத்து ஆய்வு செய்ய வேண்டும் என்றும் கேட்டுக் கொண்டனர். ஒன்றியக் குழு தலைவர் சாந்தி பஞ்சமூர்த்தி, குழு அமைத்து ஆய்வு மேற்கொள்ளப்படும் என்று தெரிவித்தார். இதையடுத்து தொழிற்சாலைகள் சம்பந்தப்பட்ட தீர்மானங்கள் நிறுத்தி வைக்கப்பட்டன.
இதில் ஆணையர் மங்களலட்சுமி, வட்டார வளர்ச்சி அலுவலர் சீனுவாசன், துணைத் தலைவர் காசிராஜன் உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.