மீண்டும் மார்க்சியம்-பொருளாதார அறிஞர்!

வியாழன், 20 நவம்பர் 2008 (14:10 IST)
முதலாளித்துவத்தில் உள்ள முரண்பாடுகளால், பொருளாதாரம் வளர்ச்சி அடைகிறது. மீண்டும் வீழ்ச்சி அடைகிறது. மார்க்சிசத்தை புரிந்து கொள்வதே, தற்போது ஏற்பட்டுள்ள நிதி நெருக்கடியை தீர்க்க உதவிகரமாக இருக்கும் என்று பிரபல பொருளாதார நிபுணரும், மார்க்சிய எழுத்தாளருமான பேராசிரியர் சமீர் அமீன் கூறினார்.

எகிப்பை சேர்ந்த சமீர் அமீன் சர்வதேச அளவில் அறியப்பட்ட பொருளாதார நிபுணர். இவர் மார்க்சிய பொருளாதார அடிப்படையில் கட்டுரைகளையும், புத்தகங்களையும் எழுதியுள்ளார். இவர் செனகல் நாட்டில், டகார் நகரத்தில் உள்ள முன்றாவது உலக நாடுகளின் அமைப்பு என்ற ஆய்வு நிறுவனத்தின் இயக்குநராக உள்ளார்.

மும்பை பல்கலைக்கழகத்தின் பட்டமளிப்பு மண்டபத்தில், முதலாளித்துவ நெருக்கடியும் - 21ஆம் நூற்றாண்டில் சோஷலிச தீர்வும் என்ற தலைப்பில் அனுராதா காண்டே நினைவு சொற்பொழிவாற்ற வந்துள்ளார். இன்று மாலை சொற்பொழிவு நிகழ்ச்சி நடைபெறுகிறது.

இதற்கு முன்னதாக அமைப்பாளர்கள், சமூக ஆர்வர்கள் மத்தியில் கலந்துரையாடினார். அப்போது அவர் கூறுகையில், தற்போது உலக அளவில் ஏற்பட்டுள்ள பொருளாதார நெருக்கடிக்கு தீர்வு காண, மார்க்சிசத்தை புரிந்து கொள்வது மட்டுமே உதவிகரமாக இருக்கும்.

இப்போது உலக அளவில் உள்ள நெருக்கடி, கலாச்சாரம், தேசிய அடையாளம், மதம் என்பதில் மட்டும் இல்லை. அதையும் தாண்டி ஏகாதிபத்தியம், முதலாளித்துவ வளர்ச்சி மற்றும் வளர்ச்சி இன்மை போன்றவைகளுடன் வர்க்கம் வேறுபாடுகளால் ஏற்பட்டுள்ளது என்று கூறினார்.

அறுவது மற்றும எழுபதாம் ஆண்டுகளில், உலக வழி முறை" என்ற புதிய கருத்தியல் தொடங்கியது. இந்த கருத்தியலை பேராசிரியர் சமீர் அமீன், பொருளாதார நிபுணர்களான இமானுவேல் வால்டர்ஸ்டீன், ஜியோவனி அரிகாய், குன்டப் பிராங்க் போன்ற நிபுணர்கள் சேர்ந்து உருவாக்கினார்கள்.

அப்போது இந்த கருத்தியல் அறிவு ஜீவிகள் மத்தியில் மட்டுமல்லாமல், இடதுசாரி சிந்தனையாளர்களிடமும் பெரும் தாக்கத்தை ஏற்படுத்தியது.

இந்த சொற்பொழிவு பற்றி, இதன் அமைப்பாளர் பி.ஏ.செபாஸ்டியன் கூறுகையில், அனுராதா காண்டே, அவரின் இளமை காலத்தில் மும்பையில் மாணவர்கள் மற்றும் ஜனநாயக உரிமை இயங்களில் ஈடுபட்டார். பிறகு நாக்பூருக்கு குடியெயர்ந்த உடன் அங்கு பெண்கள் உரிமை இயக்கம், தொழிற்சங்க பணிகளில் ஈடுபட்டார். பழங்குடியினரின் நலனுக்காக பாடுபட்ட அனுராதா காண்டே, பழங்குடி மக்களுடன் தங்கியிருக்க்யில் மலேரியாவால் பாதிக்கப்பட்டு, சென்ற ஏப்ரல் 12 ஆம் தேதி காலமானார் என்று தெரிவித்தார்.

அமெரிக்கா. ஐரோப்பிய நாடுகளில் தற்போதைய பொருளாதார நெருக்கடிக்கு பிறகு, அந்த நாடுகளில் மார்க்சியம் பற்றிய தேடல் அதிகமாகி உள்ளது. குறிப்பாக இளம் தலைமுறையினர் மத்தியில் மார்க்சிய பொருளாதாரம் பற்றிய சிந்தனை அதிகரித்துள்ளது. கார்ல் மார்க்ஸ் எழுதிய தாஸ் கேப்பிடல், கம்யூனிஸ்ட் மெனுபெஸ்டோ போன்ற நூல்களின் விற்பனை அதிகரித்துள்ளது என்று தகவல்கள் தெரிவிக்கின்றன.

வெப்துனியாவைப் படிக்கவும்