சர்வதேச நிதி நிலைமை சவால்கள் எதிர்கொள்ள இந்தியா தயாராகிறது.

ஆசிய அளவில் 1990 ஆம் ஆண்டுகளில் நிதி நிலைமையில் மந்த நிலைமை ஏற்பட்டது. அப்போது அதன் தாக்கத்தில் இருந்து இந்தியா உட்பட சில நாடுகள் பாதிக்கப்படவில்லை. இதனால் இந்தியாவில் எவ்விதமான விளைவுகளும் ஏற்படவில்லை.

ஆனால் இதுபோன்ற நிலைமை இந்த முறை இல்லை. உலக நாடுகளின் பலவற்றில் தற்போது நிதி நெருக்கடி ஏற்பட்டுள்ளது. இதனால் எவ்விதமான நேரடி விளைவுகளும் இந்திய பொருளாதாரத்தில் இல்லாமல் போனாலும், பாதிப்பு ஏற்படாது என்று கூறுவதற்கில்லை.

மற்ற நாடுகளில் ஏற்பட்டுள்ள நிதி நிலைமையின் பின்னடைவு எல்லா நாடுகளையும் பாதித்துள்ளது என்பதுதான் உண்மை. ஆனால் இந்த நிலைமையை சமாளிக்க உலகில் உள்ள நாடுகள் அனைத்தும் ஒன்றிணைந்து செயல்படுவது என்பது நேர்மறையான விளைவை ஏற்படுத்தி உள்ளது. நம் வாழ்நாளில் இதுபோன்ற நிலைமையை சமாளிப்பது ஒரு சவால் என்று அமெரிக்க அதிபர் ஜார்ஜ் புஷ் கூறியுள்ளது இங்கு குறிப்பிடத்தக்கது.
இந்தியாவைப் பொருத்தவரை, நமது பொருளாதார வல்லுனர்கள் இதுபோன்ற நிலைமையை நாம் சமாளிக்க முடியும் என்று நம்பிக்கை தெரிவித்துள்ளனர்.

இது குறித்து உலக வங்கியின் தலைவர் ராபர்ட் சோலிக், தற்போது ஏற்பட்டுள்ள நெருக்கடியால், இந்தியாவிற்கு நிதி நிலைமையில் எவ்வித மோசமான பாதிப்பும் இருக்காது என்றும் பொருளாதார வளர்ச்சியில் சிறிது மந்தநிலை காணப்படும் என்றும் கூறியுள்ளார்.

மத்திய அரசு, இந்தியாவில் இந்த நிலைமையை சமாளிக்க தேவையான முறைகள் உள்ளன என்று கூறியுள்ளது. இந்திய பொருளாதாரம் மிகச் சிறந்த முறையில் இருக்கிறது என்றும் பொதுத் துறை மற்றும் தனியார் துறையில் உள்ள வங்கிகள் சிறந்த முதலீட்டுடனும் வலுவான நிதி நிலைமையுடனும் நல்ல வழிமுறைகளுடனும் செயல்படுகிறது என்று மத்திய நிதியமைச்சர் ப. சிதம்பரம் கூறியுள்ளார்.

ரிசர்வ் வங்கி எடுத்துள்ள கணக்கெடுப்பின்படி, இந்த வங்கியும் இதையே தெரிவித்தாலும் வளர்ச்சி விகிதம் 7.7 சதவிகிதமாக குறையும் என்று கூறியுள்ளது.

இந்த பொருளாதார மந்த நிலைமை இந்தியாவில் ஏற்பட துவங்கியுள்ளது. பிரதமரின் பொருளாதார ஆலோசனைக் குழு இதுபற்றி கருத்து தெரிவிக்கையில், நடப்பு நிதியாண்டில் வளர்ச்சி விகிதம் 7 சதவீதமாக இருக்கும் என்றும்

சென்ற ஆண்டு 9 விழுக்காடாக இருந்தது என்றும் தெரிவித்தது. ஆயினும் வளர்ச்சி விகிதத்தில் இந்தியா உலகில் இரண்டாவது இடத்தைப் பெறும் என்று கூறியுள்ளது.

மைக்ரோ சாப்ட் நிறுவனத்தின் தலைவர் பில்கேட்ஸ், தற்போதைய பொருளாதார பின்னடைவு வெகுகாலம் நீடிக்காது என்றும் ஆனால் இது எவ்வளவு காலம் நீடிக்கும் என்று கூறுவது கடினம் என்றும் கூறியுள்ளார்.

இந்த நிலைமையில் நாம் மெத்தனமாக இருக்க முடியாது. பிரதமர் மன்மோகன் சிங் சமீபத்தில் நாட்டில் உள்ள முக்கியத் தொழிலதிபர்களின் கூட்டத்தில் பேசுகையில், பொருளாதார மந்தநிலைமையின் விளைவு அதிகமாகவும், அதிககாலம் நீடிக்கக் கூடியதாகவும் இருக்கும் என்று கூறியுள்ளார். நிலைமை மோசமாகாமல் இருக்க சில நடவடிக்கைகளை எடுக்க வேண்டியது அவசியம் என்றும் கூறினார்.

அவர் மேலும் பேசுகையில், பணவீக்கம் அதிகரிக்காமல் இருக்க, அதற்கு முக்கியத்துவம் கொடுக்கப்பட்டுள்ளது. சில மாதங்களுக்கு முன்பு இருந்த வளர்ச்சி விகிதத்திற்கும், பணவீக்கத்திற்கு இடையே உள்ள இடைவெளி தற்போது குறைவாகவே உள்ளது என்றும் சென்ற சில மாதங்களில் இது அதிகமாக இருந்தது என்றும் கூறினார். பணவீக்கத்தினால் வளர்ச்சி விகிதம் நீண்டகால அடிப்படையில் பாதிக்கா வண்ணம் செயல்பட வேண்டும். குறுகிய கால அடிப்படையில் முன்னுரிமை பிரிவுகளுக்கு அவ்வப்போது அதிக கவனம் கொடுக்கப்பட வேண்டும். இதுபோன்ற புதிய நிலைமையில் வளர்ச்சி வேகத்தை நிலை நிறுத்த முயற்சிகள் மேற்கொள்ளப்படும் என்றும் கூறியுள்ளார்.

எனவே, உள்நாட்டு தேவையை சமாளிக்கவும், பணப்புழக்கத்தை மேலும் அதிகப்படுத்தவும் வழிமுறைகள் ஏற்படுத்தப்படும். இந்திய ரிசர்வ் வங்கி,

மத்திய அரசின் கொள்கைக்கு ஏற்றபடி நடவடிக்கைகளை எடுத்துள்ளது. ரிசர்வ் வங்கியில் மற்ற வங்கிகள் செலுத்தும் பண இருப்பு விகிதத்தை 9 விழுக்காட்டில் இருந்து 5.5 விழுக்காடாக படிப்படியாக குறைத்துள்ளது.

அதே போல் வங்கிகளுக்கு ரிசர்வ் வங்கி அளிக்கும் கடன் விகிதம் 9 விழுக்காட்டில் இருந்து, 7.5 விழுக்காடாக குறைக்கப்பட்டுள்ளது. நிலையான பணப்புழக்க விகிதம் ஒரு சதவீதம் குறைக்கப்பட்டு 24 சதவீதமாக உள்ளது. இவை அனைத்தையும் ரிசர்வ் வங்கி ஒரு மாத காலத்திற்குள் அறிவித்தது. இதுபோன்ற நடவடிக்கைகளால் ரிசர்வ் வங்கி மேலும் ரூ.1,85,000 கோடி புழக்கத்தில் விடுத்துள்ளது.

நாம் பணவீக்க விகிதம் குறித்து சிறிதும் கவலையடையத் தேவையில்லை என்ற போதிலும், தொழில் துறை உற்பத்தி குறியீடு குறைந்த கொண்டே வருவது சிறிது கவலையளிக்கக் கூடிய விஷயமாகும்.

ரியல் எஸ்டேட், கட்டிடத் துறை, தகவல் தொழில்நுட்பம், உருக்கு, விமானப் போக்குவரத்து போன்ற தொழில் துறைகள் வெகுவாக பாதிக்கப்பட்டுள்ளன. இந்தத் துறைகளுக்கு தேவையான நிவாரண நடவடிக்கைகளை அரசு விரைந்து எடுத்து வருகிறது. இருப்பினும், தொழில் துறையில் இந்த நிலைமை மேலும் சிறிது காலம் நீடித்து குறியீட்டு எண் குறையும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

2007 ஆம் ஆண்டு செப்டம்பர் முதல் 2008 ஆம் ஆண்டு செப்டம்பர் மாத வரையிலான கால கட்டத்தில், தொழில் துறையின் வளர்ச்சி விகிதம் 6 விழுக்காட்டில் இருந்து 5 விழுக்காடாக குறைந்துள்ளது. இதுபற்றி நாம் கவலை

கொள்ளத் தேவையில்லை. ஆயினும் 2007-08 ஆம் ஆண்டு ஏப்ரல் முதல் செப்டம்பர் மாத வரையிலான கால கட்டத்தில் இருந்த வளர்ச்சி விகிதத்தை ஒப்பிட்டு பார்க்கும் போது வளர்ச்சி விகிதம் குறைந்துள்ளது.

தற்போதைய சர்வதேச பொருளாதார மந்த நிலைமையினால் தேவைகள் குறைந்து, நம் நாட்டின் ஏற்றுமதி வளர்ச்சி செப்டம்பர் மாதத்தில் 10.4% குறைந்தது. இதற்கு முந்தைய ஆண்டில் இது 35% ஆக இருந்தது. வர்த்தகமும் குறைந்தது.

ஆனால் தற்போது சர்வதேச அளவில் கச்சா எண்ணெய்யின் விலை பீப்பாய் 58 டாலர் என்ற அளவில் இருப்பதால், இந்த நிதியாண்டின் பிற்பகுதியில் வர்த்தகம் வலுப்படும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. இந்திய ரூபாயின் மதிப்பு குறைந்ததால் ஏற்றுமதி அதிகமாகும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

ஆனால் உலக நாடுகள் பலவற்றில் நிதி நிலைமையில் பின்னடைவு ஏற்பட்டிருப்பதால் சர்வதேச அளவில் தேவைகள் குறையும். ஆகவே ஏற்றுமதியில் சிறிது பாதிப்பு ஏற்படும். தேவைகள் குறைவதாலும் ஏற்றுமதி பாதிக்கப்படுவதாலும் பல நிறுவனங்கள் தங்களது உற்பத்தியைக் குறைக்க வேண்டிய நிர்ப்பந்தத்திற்கு உள்ளாகியுள்ளன.

ஆகவே தான் ஒவ்வொரு நாடும் உள்நாட்டுத் தேவைகளை அதிகரிக்க பணப்புழக்கத்தை அதிகரித்து வருகின்றன. சீனா, பிரேசில் போன்ற பல நாடுகளை ஒப்பிட்டுப் பார்க்கும் போது இந்தியாவில் உள்நாட்டு தேவைகள் மிகவும் அதிகரிக்கும் என்பதால் அந்நாடுகளைவிட இந்தியா சிறந்த நிலையில் உள்ளது.

பொதுத் துறை வங்கிகள் வாடிக்கையாளர்களுக்கு குறைந்த வட்டியில் கடன் கொடுக்க முயற்சிகளை மேற்கொண்டுள்ளன. மத்திய நிதியமைச்சர் அண்மையில் வங்கிகளின் தலைவர்களிடையே பேசும் போது இது பற்றி கூறியதை தனியார் வங்கிகளும் பின்பற்றுவது அவசியமாகிறது. தற்போதைய அசாதாரணமான நிதி நிலைமையை உத்தேசித்து வங்கிள்ா ஒருங்கிணைந்த முயற்சியில் ஈடுபட வேண்டும். குறுகிய கால அடிப்படையில் லாப நோக்கில் மட்டும் வங்கிகள் செயல்படக் கூடாது.

மருத்துவம், கல்வி போன்ற சமூக கட்டமைப்பு வசதிகளில் அதிகளவு முதலீடு செய்வது சிறந்ததாகும். அரசு 600 புதிய பள்ளிகளை ஊராட்சி ஒன்றியங்களில் நிறுவுவது என்பது சிறந்த நடவடிக்கையாக உள்ளது.

அதே நேரத்தில் இந்தியா சர்வதேச நிறுவனங்களில் சீர்திருத்தங்களை கொண்டுவர வேண்டும் என்றும், அவற்றுக்கு சரியான வழிமுறைகளையும் கண்காணிக்கும் பணிகளையும் மேற்கொள்ள வேண்டும் என்றும் கேட்டுக் கொண்டுள்ளது.

ஏனெனில் இதுபோன்ற நிலைமை எதிர் காலத்தில் ஏற்படாமல் இருக்க உதவும். ஆனால் தற்போதைய நிலைமையில் சவால்களை சந்தித்து ஏற்ற இறக்கங்களை பொருட்படுத்தாமல் செயல்பட வேண்டியது அவசியம். பல்வேறு கோணங்களில் இதை சமாளிக்க அணுகு முறைகள் தேவை. அவைகள் தான் தற்போது செயல்படுத்தப்பட்டு கொண்டு வருகின்றன.

வெப்துனியாவைப் படிக்கவும்