ஏற்றுமதி இலக்கு-அரசு பரிசீலனை!

புது டெல்லி: பல்வேறு நாடுகளில் ஏற்பட்டுள்ள பொருளாதார நெருக்கடியால், இந்தியாவின் ஏற்றுமதி குறையாமல் இருக்குமா என்று உறுதியாக கூற முடியவில்லை. இந்த சூழ்நிலையில் இந்த நிதி ஆண்டில் 200 பில்லியன் டாலர் ஏற்றுமதி இலக்கை அடைய முடியுமா என்று மத்திய அரசு பரீசீலனை செய்ய இருப்பதாக மத்திய தொழில் மற்றும் வர்த்தக அமைச்சர் கமல்நாத் கூறினார்.

புது டெல்லியில் இந்திய பொருளாதார மாநாடு-2008 [India Economic Summit 2008] நடை பெறுகிறது. இதில் கலந்து கொள்ள வந்த கமல்நாத் செய்தியாளர்களிடம் பேசுகையில், உலக நாடுகளில் ஏற்பட்டுள்ள பொருளாதார பின்னடைவால், இந்தியாவின் ஏற்றுமதி குறையுமா என்பது குறித்து பரிசீலிக்க உள்ளேன்.

ஏப்ரல் முதல் செப்டம்பர் வரையிலான ஆறு மாதத்தில் ஏற்றுமதி வளர்ச்சி 30.9 விழுக்காடு என்ற அளவில் இருந்தது. ஏற்றுமதியாளர்களுக்கு நிதி மற்றும் கடன் உதவி பற்றி, பிரதமரின் உயர்மட்ட குழுவுடன் விவாதிக்க உள்ளேன்.

இன்று பிரதமரின் பொருளாதார குழுவுடன் ஆலோசனை நடத்த உள்ளோம் என்று கமல்நாத் தெரிவித்தார்.

பல்வேறு நாடுகளில் ஏற்பட்டுள்ள பொருளாதார நெருக்கடியால், இந்தியாவின் ஏற்றுமதி பாதிக்கப்பட்டுள்ளது என்பது தெளிவாகவே தெரிகிறது. அக்டோபர் மாதத்தில் ஏற்றுமதி 15 விழுக்காடு குறைந்துள்ளது. சென்ற வருடம் 162 பில்லியன் டாலர் மதிப்புள்ள பொருட்கள் ஏற்றுமதி செய்யப்பட்டன. இதன் அடிப்படையில் இந்த நிதி ஆண்டில் ஏற்றுமதி இலக்கு 200 பில்லியன் டாலர் என அரசு நிர்ணயித்துள்ளது.

அதே நேரத்தில் டன் அண்ட் பிராட்ஸ்டீரிட் போன்ற சர்வதேச ஆய்வு நிறுவனங்கள், இதே அளவு வளர்ச்சி இருக்குமா என்று ஐயம் தெரிவித்துள்ளன. இந்தியாவில் இருந்து அதிக அளவு ஏற்றுமதி ஆகும் நாடுகளான அமெரிக்கா, ஐரோப்பிய ஒன்றிய நாடுகள் கடும் பொருளாதார நெருக்கடியில் சிக்கியுள்ளன.

வெப்துனியாவைப் படிக்கவும்