பொருளாதார நெருக்கடியை ஒரே நாளில் தீர்க்க முடியாது-புஷ்

சனி, 15 நவம்பர் 2008 (13:14 IST)
வாஷிங்டன்: தற்போது ஏற்பட்டுள்ள பொருளாதார நெருக்கடிக்கு, ஒரே நாளில் தீர்வு காண முடியாது என்று அமெரிக்க அதிபர் ஜார்ஜ் புஷ் கூறினார்.

அமெரிக்க தலைநகர் வாஷிங்டனில் உலக அளவில் ஏற்பட்டுள்ள பொருளாதார நெருக்கடிக்கு தீர்வு காண்பது பற்றி விவாதிக்க ஜீ-20 நாடுகளின் கூட்டம் நடைபெறுகிறது. இந்த கூட்டத்தை அமெரிக்க அதிபர் புஷ் கூட்டியுள்ளார்.

இதில் இந்தியா சார்பில் பிரதமர் மன்மோகன் சிங் தலைமையில், நிதி அமைச்சர் ப.சிதம்பரம், திட்டக்குழு துணைத் தலைவர் மான்டேக் சிங் அலுவாலியா மற்றும் உயர் அதிகாரிகள் கொண்ட குழு பங்கேற்கிறது.

அமெரிக்க அதிபர் புஷ் நேற்று வெள்ளை மாளிகையில், ஜீ-20 நாடுகளின் தலைவர்களுக்கு விருந்தளித்தார்.

அப்போது அவர் பேசும் போது, தற்போது ஏற்பட்டுள்ள பிரச்சனை ஒரே நாளில் ஏற்பட்டதல்ல. இதே போல் இதற்கு ஒரே நாளில் தீர்வு காண முடியாது. ஆனால் எல்லா நாடுகளிடையே ஒத்துழைப்பும், உறுதியும் இருந்தால், தற்போது ஏற்பட்டுள்ள பொருளாதார நெருக்கடிக்கு தீர்வு காண முடியும்.

தற்போதைய நெருக்கடிக்கு மட்டும் தீர்வு காண்பதாக இல்லாமல், நீண்டகால அடிப்படையில் நடவடிக்கை எடுக்க வேண்டும்.

ஏழைநாடுகளின் வறுமையை ஒழிக்க, வளர்ந்த நாடுகள் முன்பு செய்வதாக கூறிய, உதவிகளை தொடர வேண்டும். அத்துடன் கூடுதலாக மூதலீடுகளையும் செய்ய வேண்டும்.

பல்வேறு நாடுகளில் வாழும் மக்கள், அவர்களின் வாழ்க்கைத் தரம், உலக அளவிலான பொ ருளாதாரம் சிறப்பாகவும், வளர்ச்சியை நோக்கி இருக்கிறது என்பதை உணர்ந்துள்ளனர். இந்த வளர்ச்சி தொடர்ந்து முன்னேற வேண்டும் என்றால் தங்கு தடையற்ற சந்தை பொருளாதார கொள்கைகளை பின்பற்ற வேண்டும்.

தங்குதடையற்ற பொருளாதாரம் தான் உலகம் முழுவதற்குமான வளர்ச்சிக்கும், சிறந்த சுபிட்சமான எதிர்காலத்தை நோக்கி முன்னேறுவதற்கு உந்து சக்தியாக இருக்கும் என்று புஷ் கூறினார்.

இந்த விருந்துக்கு பிறகு, வெள்ளை மாளிகையின் செய்தி தொடர்பாளர் டானா பெரினா விடுத்துள்ள அறிக்கையில், ஜீ-20 நாடுகள் தலைவர்களிடையான சந்திப்பு பயனுள்ள முறையில் இருந்தது. இந்த தலைவர்கள் உலக பொருளாதார அமைப்பை பாதுகாக்க, நாளை உறுதியான முடிவு எடுக்க உள்ளனர் என்று கூறியுள்ளார்.

வெப்துனியாவைப் படிக்கவும்