பொருளாதார நெருக்கடியால் பிம்ஸ்டெக் நாடுகளில் பாதிப்பு இல்லை-பிரதமர் மன்மோகன் சிங்.

வியாழன், 13 நவம்பர் 2008 (18:03 IST)
பொருளாதார நெருக்கடியால் பிம்ஸ்டெக் நாடுகளில் பாதிப்பு இல்லை-பிரதமர் மன்மோகன் சிங்.

புது டெல்லி: பல்வேறு நாடுகளில் ஏற்பட்டுள்ள பொருளாதார நெருக்கடிக்கு தீர்வு காண ஜீ-20 நாடுகளின் கூட்டம் அமெரிக்காவில் நடைபெற உள்ளது. இவ்வேளையில் இநத பொருளாதார நெருக்கடியினால், வங்காள விரிகுடா நாடுகள் அதிக அளவு பாதிக்கப் படவில்லை என்று பிரதமர் மன்மோகன் சிங் கூறினார்.

வங்காள விரிகுடா பகுதியில் அமைந்துள்ள நாடுகளிடையே, பல்வேறு தொழில் நுட்ப மற்றும் பொருளாதார ஒத்துழைப்புக்கான அமைப்பு பிம்ஸ்டெக் (BIMSTEC). இதில் இந்தியா, வங்காளதேஷம், பூடான், மியான்மிர், நேபாளம், சிறிலங்கா, தாய்லாந்து ஆகிய நாடுகள் உறுப்பினர்களாக உள்ளன.

இதன் கூட்டம் புது டெல்லியில் நடைபெற்றது. இன்று இந்த நாட்டு தலைவர்கள் கலந்து கொண்ட செய்தியாளர்களின் சந்திப்பு நடைபெற்றது.

இதில் பிரதமர் மன்மோகன் சிங் பேசும் போது, அமெரிக்கா மற்றும் ஐரோப்பிய நாடுகள் போன்ற வளர்ந்த நாடுகளில் ஏற்பட்டுள்ள பொருளாதார நெருக்கடி பற்றி கவலை கொள்ள வேண்டாம். இந்த நாடுகளில் அதன் தாக்கம் குறைந்த அளவே உள்ளது. பிம்ஸ்டெக் கூட்டமைப்பு நாடுகளின் பொருளாதார அமைப்பிற்கு எவ்வித ஆபத்தும் இல்லை.

தற்போது ஏற்பட்டுள்ள நெருக்கடி போன்று எதிர் காலத்தில் ஏற்பட்டால், அதன் பாதிப்பு குறைந்த அளவாக இருக்கும் படி, சர்வதேச அளவிலான நிதி நிறுவனங்களை பலப்படுத்த வேண்டும்.

அமெரிக்கா மற்றும் ஐரோப்பாவில் ஆரம்பமான பொருளாதார நெருக்கடியின் தாக்கம் எல்லா நாடுகளிலும் உள்ளது. எங்களுக்கு மிக சிறிய அளவிலான பாதிப்பே ஏற்பட்டுள்ளது. ஏனெனில் எங்கள் நாட்டு வங்கிகள் நன்கு முறைப்படுத்தப் பட்டுள்ளன.

எனவே, பிம்ஸ்டெக் நாடுகளின் பொருளாதார அமைப்புகளுக்கு எவ்வித ஆபத்தும் இல்லை.

அதே நேரத்தில் வளர்ந்த நாடுகளில் இருந்து முதலீடு, மற்ற வகை ஆதாரங்கள் குறைவான அளவே வரும். இதனால் வளர்ச்சியின் அளவு குறையும்.

ஐக்கிய நாடுகள் சபையின் புத்தாயிரம் ஆண்டு இலக்கை எட்டுவதற்கு, வளர்ச்சியுற்ற நாடுகள், அவர்களின் சக்திக்கு ஏற்றார்போல் வளரும் நாடுகளுக்கு உதவ வேண்டும் என்று மன்மோகன் சிங் கூறினார்.

வெப்துனியாவைப் படிக்கவும்