பணக்கார இந்தியர்கள்: மிட்டலை முந்தினார் முகேஷ் அம்பானி!

பணக்கார இந்தியர்கள் வரிசையில் இதுவரை முதலிடத்தில் இருந்த எஃகு அதிபரும், வெளிநாடு வாழ் இந்தியருமான லட்சுமி மிட்டலை, ரிலையன்ஸ் நிறுவனத்தின் தலைவர் முகேஷ் அம்பானி முந்தியுள்ளார்.

webdunia photoFILE
பிரபல ஃபோர்ப்ஸ் பத்திரிகை வெளியிட்டுள்ள பணக்கார இந்தியர்களுக்கான இந்தாண்டு பட்டியலில், முகேஷ் அம்பானியின் சொத்து மதிப்பு 20.8 பில்லியன் (ஒரு பில்லியன்= 100 லட்சம்) டாலர் எனக் குறிப்பிடப்பட்டுள்ளது. அதேவேளையில், மிட்டலின் சொத்து மதிப்பு 20.5 பில்லியன் டாலர் எனக் கூறப்பட்டுள்ளது.

பணக்கார இந்தியர்கள் பட்டியலில் முகேஷ் அம்பானியின் சகோதரர் அனில் அம்பானிக்கு மூன்றாவது இடம் கிடைத்துள்ளது. இவரது சொத்து மதிப்பு 12.5 பில்லியன் டாலர்.

இதேபோல் தொலைத் தொடர்புத்துறையில் உள்ள சுனில் மிட்டல் (7.9 பில்லியன் டாலர்) 4வது இடத்தையும், டி.எல்.எஃப் நிறுவனத் தலைவர் கே.பி.சிங் (7.8 பில்லியன் டாலர்) 5வது இடத்தையும் பிடித்துள்ளனர்.

இந்தியாவின் முதல் 40 பணக்காரர்கள் இடம்பெற்றுள்ள இப்பட்டியலில் அவர்களின் மொத்த சொத்து மதிப்பு 139 பில்லியன் டாலர் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

கடந்தாண்டு வெளியான இப்பட்டியலில் இடம்பெற்றிருந்த முதல் 40 இந்திய பணக்காரர்களின் மொத்த சொத்து (351 பில்லியன் டாலர்) மதிப்பை விட இந்தாண்டு சொத்து மதிப்பு 60% சரிந்துள்ளது என்றும் ஃபோர்ப்ஸ் பத்திரிகை தெரிவித்துள்ளது.

இந்த சொத்து மதிப்பு சரிவுக்கு இந்திய பங்குச்சந்தைகளின் வரலாறு காணாத வீழ்ச்சியே காரணம் என்றும் அதில் குறிப்பிடப்பட்டுள்ளது.