கார்த்திகை பட்டம் பயிர்களுக்கான விலை- வேளாண் பல்கலை. கணிப்பு.

வியாழன், 13 நவம்பர் 2008 (10:02 IST)
கோவை, நவ. 12: கார்த்திகை பட்டத்தில் சாகுபடி செய்யும் தானியங்களின் விலை பற்றி தமிழ்நாடு வேளாண் பல்கலை ஆய்வு செய்து, விலை நிலவரத்தை வெளியிட்டுள்ளது.

இந்த பல்கலை கழகத்தில் இயங்கி வரும் உள்நாட்டு மற்றும் ஏற்றுமதி சந்தை தகவல் மையம், கொண்டை கடலை, கொத்தமல்லி, கம்பு, சூரியகாந்தி ஆகியவற்றின் விலை எவ்வாறு இருக்கும் என ஆய்வு செய்து கணித்துள்ளது.

இந்த திட்ட ஒருங்கிணைப்பாளர் ந.ரவீந்திரன் நேற்று வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் கூறியிருப்பதாவது. :

தமிழகத்தில் உற்பத்தியாகும் கொண்டை கடலையில் 70 விழுக்காடு கோவை மாவட்டத்தில்தான் சாகுபடி செய்யப்படுகிறது. கொண்டக்கடலை வர்த்தகம் நடைபெறும் உடுமலை சந்தையின் கடந்த 5 ஆண்டு கால விலை நிலவரம் ஆய்வு செய்யப்பட்டது.

இந்த ஆண்டு நல்ல மழை பெய்துள்ளதால் வரும் விதைப்பு பருவத்தில் கொண்டக்கடலை பயிரிடும் பரப்பு அதிகரிக்க வாய்ப்புள்ளது.

இந்த ஆய்வு முடிவுகளின்படி கொண்டக்கடலை விலை அறுவடை மாதங்களான பிப்ரவரி மற்றும் மார்ச் மாதங்களில் குவிண்டாலுக்கு ரூ.2.700 முதல் ரூ.2,900 வரை இருக்கும்.

கொத்தமல்லி: மசாலாப் பொருட்கள் தயாரிப்பில் கொத்தமல்லி முக்கியமானது. விருதுநகர் சந்தை நிலவரத்தை வைத்து ஆய்வு செய்ததில், எதிர் வரும் பிப்ரவரி, மார்ச் மாதங்களில் கொத்தமல்லி விலை குவிண்டாலுக்கு ரூ.6,500 முதல் ரூ.7,200 வரை இருக்கும் என கணிக்கப்பட்டுள்ளது.

தூத்துக்குடி மாவட்டத்தில் அதிகளவு கம்பு, சூரியகாந்தி, கோழித்தீவனமாக பயன்படுத்தப்படும் கம்பு பயிரிடப்படுகிறது. இந்த கார்த்திகை பட்டத்தில் கம்பு விலை குவிண்டால் ரூ.650 முதல் ரூ.750 வரை இருக்கும்.

வெள்ளக்கோவில் ஒழுங்குமுறை விற்பனைக்கூடத்தில் ஆய்வுசெய்ததில் ஜனவரி, பிப்ரவரியில் சூரியகாந்தி விலை கிலோ ரூ.28 முதல் ரூ.30 வரை இருக்க வாய்ப்பு உள்ளது.

மத்திய அரசின் இறக்குமதி வரிக் கொள்கையை சார்ந்தே சூரியகாந்தியின் விலை இருக்கும். எனவே, மண் வளம், நுகர்வோரின் தேவை, மழை அளவு, விலை அறிவுரைப்படி மேற்குறிப்பிட்ட பயிர்களை விவசாயிகள் பயிரிட்டு பயனடையலாம் என்று ரவீந்திரன் கூறியுள்ளார்.

வெப்துனியாவைப் படிக்கவும்