இந்தியாவில் பிரிட்டிஷ் சட்ட பணிகள்!

புதன், 5 நவம்பர் 2008 (13:06 IST)
புது டெல்லி: பிரிட்டனின் மிகப்பெரிய சட்ட நிறுவனங்கள் வாகனம் தொடர்பான சட்ட விவகாரங்கள், விபத்து இழப்பீடு கோரல், மற்றும் நிலுவை சான்றாணைகள் குறித்த சட்ட அலுவல் பணிகளை இந்தியாவிற்கு பெரிய அளவில் வழங்கி வருகின்றன.

உலகின் மிகப்பெரிய சட்ட நிறுவனமாக கருதப்படும் கிளிஃபோர்டு சான்ஸ் என்ற நிறுவனம் இப்பணிகளுக்காக புது டெல்லியில் தனது சொந்த அலுவலகத்தை துவக்கியுள்ளது.

எவெர்ஷெட்ஸ் என்ற மற்றொரு பிரிட்டிஷ் சட்ட ஆலோசனை நிறுவனமும், இந்தியாவில் உள்ள சட்ட நிபுணர்களை, தங்கள் அலுவல் பணிகளுக்காக பயன்படுத்தி வருவதை உறுதி செய்துள்ளது.

மேலும் பல முன்னணி பிரிட்டன் சட்ட நிறுவனங்கள் இந்தியாவிற்கு கோடிக்கணக்கான ரூபாய்கள் மதிப்புள்ள சட்ட துறை சம்பந்தப்பட்ட அலுவல்பணிகளை, இந்தியாவில் உள்ள வழக்கறிஞர்கள், மற்றும் சட்டத் துறையில் தொடர்புள்ளவர்கள் முலம் செய்து கொள்வதில் வழங்குவதில் ஆர்வம் காட்டி வருகின்றன.

கடந்த சில ஆண்டுகளாக அயல்நாடுகளில் உள்ள வங்கி, நிதி நிறுவனங்கள், காப்பீடு நிறுவனங்கள் போன்றவை, தங்கள் பணிகளை இந்தியாவில் உள்ள நிறுவனங்களுக்கு கொடுத்து முடித்துக் கொள்கின்றன. இதில் குறிப்பு எழுதுதல், ஆவணங்களை சரிபார்த்தல், வாடிக்கையாளர்களின் சந்தேகங்களுக்கு பதில் அளித்தல் உட்பட பல்வேறு பணிகளை இந்திய நிறுவனங்களுக்கு கொடுக்கின்றன. இதனால் அவைகளுக்குப குறைந்த செலவில், மனநிறைவுடன் பணிகள் முடிகின்றன. இத்தகைய அயல் அலுவலக பணி செய்யும் நமது நாட்டு நிறுவனங்கள் பொதுவாக கால்சென்டர்கள் என்று அழைக்கப்படுகின்றன. இந்த மாதிரியான நிறுவனங்கள் மூலம் இந்தியாவைச் சேர்ந்த பல்லாயிரக்கணக்கான இளஞர்களுக்கும், இளைஞிகளுக்கும் வேலை வாய்ப்பு கிடைத்துள்ளது.

இத்துடன் தற்போது இந்தியாவில் உள்ள சட்ட நிபுணர்களின் பணிகளும், மற்ற நாட்டு சட்டம் தொடர்பான நிறுவனங்களால் பெரிதும் பராட்டப்பட்டு வருகின்றன.

இந்திய சட்டக் கல்லூரிகளில் இருந்து ஒவ்வொரு ஆண்டும் சரளமாக ஆங்கிலம் பேசும் சுமார் 80,000 மாணவர்கள் சட்ட பிரிவில் பட்ட படிப்பு முடிக்கின்றனர்.

மைக்ரோசாஃப்ட் நிறுவனத்திற்கு சட்டம் தொடர்பான பணிகளை செய்து வரும் இந்தியாவைச் சேர்ந்த நிறுவனமான சிபிஏ குளோபல் என்ற நிறுவனம் 450 சட்டம் பயின்ற பட்டதாரிகளையும், வழக்கறிஞர்களையும் பணியில் அமர்த்தியுள்ளது.

இது மாதிரியான வாய்ப்புக்கள் தொடர்ந்து இந்திய சட்ட ஆலோசனை, சட்டத் துறையில் அயல் அலுவலக பணி செய்யும் நிறுவனங்களுக்கு கிடைக்க வாய்ப்பு உள்ளது

வெப்துனியாவைப் படிக்கவும்