வங்கிக் கடன் வட்டி 0.75% குறையும் - ப.சிதம்பரம்!

செவ்வாய், 4 நவம்பர் 2008 (22:56 IST)
பொதுத்துறை வங்கிகள் வழங்கும் கடனுக்கான வட்டி விகிதத்தை 0.75 விழுக்காடு குறைக்க தம்மிடம் உறுதியளித்திருப்பதாக மத்திய நிதியமைச்சர் ப. சிதம்பரம் கூறியிருக்கிறார்.

புதுடெல்லியில் பொதுத்துறை வங்கிகளின் தலைவர்களுடன் நடத்திய ஆலோசனைக் கூட்டத்தில் ஒருமனதாக இந்த முடிவு எடுக்கப்பட்டதாகவும் பின்னர் செய்தியாளர்களிடம் பேசுகையில் சிதம்பரம் தெரிவித்தார்.

கடன் வழங்கும் வங்கிகளின் செயல்பாடு மற்றும் பணப்புழக்க நிலைமை குறித்து ஆய்வு செய்வதற்காக இந்தக் கூட்டம் நடைபெற்றது.

வங்கிகள் வட்டி குறைப்பு குறித்து விவாதிப்பதற்காக நிதித்துறை செயலாளர் அருண் ராமநாதன் தனியார், பொதுத்துறை வங்கிகளில் உயர் நிலைக் கூட்டத்திற்கு அழைப்பு விடப்பட்டுள்ளதாக சிதம்பரம் கூறினார்.

சிறு மற்றும் நடுத்தர தொழில் நிறுவனங்களுக்கு கடன் வழங்குதலை அதிகப்படுத்தவும், வீட்டுக்கடன்களை அதிக அளவு கொடுப்பதன் மூலம் பணப்புழக்கத்தை உறுதிப்படுத்தவும் வங்கிகளின் தலைவர்கள் ஒப்புக் கொண்டதாகவும் அவர் கூறினார்.

கடன்களுக்கான உத்தரவாதம் ஒரு கோடி ரூபாயாக விரிவுபடுத்தப்படும் என்றும் அவர் குறிப்பிட்டார்.

வீட்டு வசதித் துறையில் போதிய நிதி இருக்கக்கூடிய வகையில், தேசிய வீட்டுவசதி வங்கிக்கு மேலும் 10 ஆயிரம் கோடி ரூபாய் கடன் வழங்க விரைவில் முடிவெடுக்கப்படும் என்றும் அவர் கூறினார்.

கடன் தேவை அதிகம் உள்ளதால், வங்கிகள் நெருக்குதலாக இருப்பதாக உணர்வதாகவும், வங்கிக் கடன்கள் குறித்து ஒவ்வொரு நாளும் கண்காணித்து வருவதாகவும் சிதம்பரம் தெரிவித்தார்.

நிதித்துறை செயலாளர், ரிசர்வ் வங்கி உதவி ஆணையர் இருவரும் தனியார் வங்கிகளின் தலைவர்களுடன் வட்டி குறைப்பு குறித்து ஆலோசனை நடத்துவார்கள் என்றார் அவர்.

நிதியமைச்சரின் இந்த அறிவிப்பால், வீட்டுக் கடன்களுக்கான வட்டி உள்ளிட்ட கடன்களுக்கான வட்டி விகிதம் குறையும் என்று தெரிகிறது.

வெப்துனியாவைப் படிக்கவும்