தொழில் நிறுவனங்களுக்கு உதவி-பிரதமர் உறுதி.

செவ்வாய், 4 நவம்பர் 2008 (10:03 IST)
புது டெல்லி:உலகில் பல நாடுகளில் ஏற்பட்டுள்ள பொருளாதார நெருக்கடி, இந்தியாவையும் கடுமையாக பாதிக்கும். அத்துடன் இதற்கு தீர்வு ஏற்பட எதிர்பார்த்ததை விட அதிக காலம் ஆகும். இந்தியாவின் வளர்ச்சி பாதிக்கப்படாமல் இருக்கும் வகையில், அரசு எல்லா உதவிகளையும் வழங்கும் என்று தொழில், வர்த்தக நிறுவனங்களுக்கு பிரதமர் மன்மோகன் சிங் உறுதியளித்தார்.

தற்போது ஏற்பட்டுள்ள பொருளாதார நெருக்கடியின் பாதிப்புகள் குறித்து, பிரதமர் மன்மோகன் சிங் நேற்று, இந்திய தொழில், வர்த்தக நிறுவனங்களின் தலைமை பொறுப்பாளர்களுடன் ஆலோசனை நடத்தினார்.

அப்போது அவர் பேசும் போது, அமெரிக்காவில் வங்கி, நிதி துறையில் ஏற்பட்ட நெருக்கடி, தற்போது மற்ற நாடுகளிலும் பரவியுள்ளது.

தற்போது பல்வேறு நாடுகளில் ஏற்பட்டுள்ள நெருக்கடியால், முதலீட்டாளர்கள் மற்றும் உள்நாட்டு தொழில் துறையினருக்கு நம்பிக்கை இழந்துள்ளனர். வங்கிகளும் கூட பாதிக்கப்பட்டுள்ளன. அதே நேரத்தில் இந்திய வங்கிகளில் நெருக்கடி ஏற்படாமல், பாதுகாப்பாக உள்ளன.

நமது வங்கிகள் சரியாக கட்டுப்படுத்தப்படுகின்றன. அத்துடன் முதலீடுகளும் உள்ளன. இப்போது ஏற்பட்டுள்ள நெருக்கடியில் நமது வங்கிகளுக்கு நேரடியான பாதிப்பு மிக குறைந்த அளவே உள்ளது.

நமது பொதுத்துறை வங்கிகளும், தனியார் துறை வங்கிகளும் பாதுகாப்பாக இருக்கின்றன என்பதை மக்களிடம் கூறிக்கொள்வதில் மகிழ்ச்சி அடைகின்றேன்.
நமது நாட்டு வங்கிகளுக்கு அரசு பின்புலமாக உள்ளது. எனவே யாரும் வங்கிகளில் போட்டு வைத்துள்ள வைப்பு தொகை போன்றவைகள் பற்றி கவலைப்பட வேண்டாம்.

நமது நிதிச் சந்தையில் பணப்புழக்கம் அதிகரிக்க தேவையான நடவடிக்கைகளை எடுத்துள்ளோம். வங்கிகளின் இருப்பு விகிதத்தை 3.5 விழுக்காடு குறைத்துள்ளோம். அதே மாதிரி எஸ்.எல்.ஆர், ரிபோ வட்டி விகிதத்தையும் குறைத்துள்ளோம்.

ரிசர்வ் வங்கியில் இருந்து, பரஸ்பர முதலீட்டு நிறுவனங்கள், வங்கிசார நிதி நிறுவனங்களுக்கு தேவையான கடன் கிடைப்பதற்கு சிறப்பு நடவடிக்கைகள் எடுக்கப்பட்டுள்ளன.

பொருளாதார நெருக்கடியால், சர்வதேச அளவில் வளர்ச்சி பாதிக்கப்பட்டுள்ளது. ஆனால் நீண்ட நாட்களுக்கு இதே நிலை நீடிக்க வாய்ப்பு இல்லை. இந்த நெருக்கடி நமது பொருளாதார வளர்ச்சியையும் பாதித்துள்ளது. மற்ற நாடுகளில் இருந்து நமது வங்கிள், தொழில் துறைக்கு கடன் கிடைப்பது குறைந்துள்ளது. இது நமது தொழில், வர்த்தக நிறுவனங்கள், வங்கிகளை பாதித்துள்ளன. இந்த நெருக்கடியால் முதலீட்டாளர்களின் மனநிலையும் மாறியுள்ளது.

நமது முதல் கடமை இந்திய வங்கி, நிதி துறையின் மீதான நம்பிக்கை குறையாமலும், அதனால் பாதிப்பு ஏற்படாமல் பார்த்துக் கொள்வதே.

நாம் தற்போது எழுந்துள்ள சூழ்நிலை எதிர்பார்க்கதது என்பதை ஏற்றுக் கொள்ள வேண்டும். அதே நேரத்தில் அதிக உன்னிப்பாக நிலைமைகளை கவனிக்க வேண்டும். அரசு தினசரி நிலைமைகளை ஆய்வு செய்து வருகிறது. உள்நாட்டு வளர்ச்சி பாதிக்காமல் இருக்க, அரசு தேவையான பொருளாதார, நிதி தொடர்பான முடிவுகளை எடுக்கும்.

இந்த நடவடிக்கைகளால், நமது வங்கி, நிதி துறை பாதிக்கப்படாமல் இருப்பதுடன், சிறப்பாக இயங்கும். அதிக பணப்புழக்கம் ஏற்பட எடுக்கப்பட்டு உள்ள நடவடிக்கை, வங்கிகளுக்கான ரிபோ வட்டி விகிதம் குறைக்கப்பட்டு உள்ளதால், நியாயமான வட்டியில் கடன் கிடைக்கும். மக்களின் நம்பிக்கை சீர்குலையாமல் இருக்கும் வகையில், தேவாயான நடவடிக்கைகளை உடனுக்குடன் எடுக்கும்படி பொதுத்துறை வங்கிகள் அறிவுறுத்தப்பட்டுள்ளன.

நாம் எடுத்த உறுதியான முடிவுகளால், பணவீக்கம் குறைய தொடங்கியுள்ளது. கடந்த ஆறு வாரமாக மொத்த விலை குறியீட்டு எண் குறைந்து வருகிறது.

விமான போக்குவரத்து, உருக்கு தொழில் துறைக்கு வரி குறைக்கப்பட்டுள்ளது.

இதே மாதிரி எதிர்காலத்தில் ஏற்படாமல் இருக்க, இந்தியா உலக அளவில் நிதி துறையில் சீர்திருத்தங்களை செய்ய வேண்டும் என்று எதிர்பார்க்கிறது.

இந்த நெருக்கடியான நிலையை சமாளிக்கும் அதே நேரத்தில், தொழில் நிறுவனங்கள் ஊழியர்களை பணி நீக்கம் செய்வது போன்ற, தீடீர் முடிவுகளை எடுக்க கூடாது. இது போன்ற நடவடிக்கைகள் நேர்மறையான எண்ணத்தை உருவாக்கிவிடும்.

தொழில் நிறுவனங்கள், தற்போது ஏற்பட்டுள்ள நெருக்கடியின் பாதிப்புகளில் இருந்து மீண்டு வர நடவடிக்கைககள் எடுக்கும் போது, அவற்றின் சமூக பொறுப்புகளையும் மனதில் கொள்ள வேண்டும் என்று பிரதமர் மன்மோகன் சிங் கூறினார்.






வெப்துனியாவைப் படிக்கவும்