தேங்காய் எண்ணெய் இறக்குமதி வரி உயர்த்த வேண்டும்!

திங்கள், 3 நவம்பர் 2008 (11:35 IST)
பொள்ளாச்சி : தேங்காய் எண்ணெய்க்கு இறக்குமதி வரியை உயர்த்த வேண்டுமெனகோவை தெற்கு மாவட்ட பாஜக துணைத் தலைவர் எஸ்.வி.முத்துராமலிங்கம் கூறியுள்ளார்.

பல ஆண்டுகளாக கடும் விலை வீழ்ச்சி, வறட்சி மற்றும் ஈரியோபைட் தாக்குதல் காரணங்களால் தென்னை விவசாயிகள் சிரமத்துக்கு உள்ளாகியுள்ளனர். இரண்டு மாதங்களுக்கு முன்பு கொப்பரை விலை உயர்ந்தது. 1 கிலோ கொப்பரை விலை ரூ.43 வரை அதிகரித்தது. இந்த விலை தென்னை. விவசாயிகளுக்கு இது கட்டுப்படியாகும் விலையாக இருந்தது.

இதே நேரத்தில் மத்திய அரசு எடுத்த முடிவு காரணமாக தேங்காய் எண்ணெய் உட்பட சமையல் எண்ணெய்களுக்கு இறக்குமதி வரி முற்றிலும் நீக்கப்பட்டது. அதே போல் சமையல் எண்ணெய் ஏற்றுமதிக்கும் தடை விதிக்கப்பட்டது.

இதனால் முதல் ரக தேங்காய் எண்ணெய் ஏற்றுமதி செய்யும் வாய்ப்பை இழந்தன. இதையடுத்து தேங்காய் எண்ணெய் நிறுவனங்கள் கொப்பரைத் தேங்காய் விலையைக் குறைக்கு தொடங்கின. 1 கிலோ ரூ.43 இருந்த கொப்பரை தேங்ாகய் விலை, தற்போது ரூ.37 ஆக குறைந்துவிட்டது.

இந்த விலை மத்திய அரசின் நாபெட் நிறுவனத்தின் ஆதரவு விலைக்கும் குறைவாக உள்ளது. இதன் விலை வீழ்ச்சியால் கோவை மாவட்ட தென்னை விவசாயிகள் கடும் பாதிப்புக்கு உள்ளாகியுள்ளனர்.

பிரதமர், மத்திய வேளாண் அமைச்சர் மற்றும் நிதி அமைச்சர் தலையிட்டு, தேங்காய் எண்ணெய் ஏற்றுமதிக்கு அனுமதி அளிக்க வேண்டும். இதை போல் இறக்குமதி வரியை அதிகரித்து தென்னை விவசாயிகளைக் காக்க வேண்டும் என்று எஸ்.வி.முத்துராமலிங்கம் விடுத்துள்ள அறிக்கையில் கூறியுள்ளார்.

வெப்துனியாவைப் படிக்கவும்