சிறு தொழில் பட்டியலில் 14 பொருட்களை சேர்க்க கோரிக்கை!

சனி, 1 நவம்பர் 2008 (17:05 IST)
நாமக்கல்: மத்திய அரசு சிறு தொழில் பட்டியலில் இருந்து நீக்கிய 14 வகையான உற்பத்தி பொருட்களை, மீண்டும் சேர்க்க வேண்டும் என்று சிறு மற்றும் குறுந்த தொழில்கள் சங்கம் கோரியுள்ளது.

சிறுதொழில் பட்டியலில் இருந்து மசாலா, எலக்ட்ரிக்கல்ஸ், ஒயரிங், சுவிட், பிளக் உள்பட 14 வகையான பொருட்களை மத்திய அரசு நீக்கம் செய்துள்ளது.இதற்கு சிறுதொழில்கள் சங்கம் கடும் எதிர்ப்பு தெரிவிக்கிறது.

மத்திய அரசு இளைஞர்களுக்கு வேலைவாய்ப்பு அளிக்க வேண்டும் என்ற அடிப்படையில் 626 வகையான பொருட்களை சிறுதொழில் பிரிவு நிறுவனங்கள் மட்டுமே தயாரிக்க வேண்டும் என்று ஒதுக்கி உத்தரவு பிறப்பித்து இருந்தது.

இந்த பட்டியலிஸ் உள்ள பொருட்களின் எண்ணிக்கை 800 ஆக உயர்த்தப்பட்டது. 1990 ஆம் ஆண்டுக்கு பிறகு சிறு தொழில் பிரிவு நிறுவனங்கள் மட்டுமே தயாரிக்க வேண்டும் என்று இருந்த பல பொருட்கள், இந்த பட்டியலில் இருந்து நீக்கப்பட்டுள்ளது.

சிறு தொழில் நிறுவனங்களே 10,12 ஆம் வகுப்பு, பட்டயச் சான்றிதழ் முடித்த இளைஞர்களுக்கு வேலைவாய்ப்பு வழங்கி வருகிறது. இந்நிலையில் மத்திய அரசு சிறுதொழில் பட்டியலில் இருந்து, கடந்த 10 ஆம் தேதி முதல் 14 வகையான பொருட்களை நீக்கியுள்ளது.

இதனால் பெரிய நிறுவனங்கள் நேரடியாக இந்த தொழிலில் இறங்கி, ஆயிரம் பேர் செய்யும் வேலையை 50 பேரைக் செய்து முடிக்கும். எனவே, சிறுதொழில்கள் பட்டியலில் இருந்து எந்த பொருட்களையும் நீக்க கூடாது. ஏற்கெனவே நீக்கியுள்ள பொருட்களை மீண்டும் பட்டியலில் சேர்க்க வேண்டும் என்று இந்த சங்கத்தின் நாமக்கல் மாவட்ட தலைவர் என். இளங்கோ விடுத்துள்ள அறிக்கையில் கூறியுள்ளார்.

வெப்துனியாவைப் படிக்கவும்