சொத்து வரி உயர்வை குறைக்க மாநகராட்சி முடிவு!

சனி, 1 நவம்பர் 2008 (13:05 IST)
மதுரை: மதுரையில் வணிகம், தொழிற்சாலை கட்டிடங்களுக்கு, சொத்து வரி அதிகரித்ததை குறைக்க மாநகராட்சி முடிவு செய்துள்ளது.

மதுரை மாநகராட்சிப் பகுதிகலில் ஏப்ரல் மாதம் முதல் சொத்து வரியை உயர்த்துவதாக மாநகராட்சி அறிவித்தது.

இதில் குடியிருப்பு கட்டடங்களுக்கு சொத்து வரி உயர்வு 25% உயர்த்துவதாக அறிவித்தது.

ஆனால், வணிகக் கட்டிடங்களுக்கு சொத்து வரி 150%, தொழிற்சாலை கட்டடங்களுக்கு 100%, உயர்த்த மாநாரகாட்சி தாக்கீது (நோட்டீஸ்) அனுப்பியது.

இந்த வரி உயர்வு மிக அதிகமாக இருக்கிறது. இதை குறைக்க வேண்டும் என வர்த்தக சங்கங்கள் உள்ளிட்ட பல்வேறு தரப்பிலிருந்தும் கோரிக்கை விடுக்கப்பட்டது.

இந்த வரி உயர்வை ஆட்சேபித்தும், குறைக்க வேண்டும் என்று வலியுறுத்தியும் வணிகர்கள், பொதுமக்கள் மேயரிடமும், ஆணையாளரிடமும் மனுக்கள் கொடுத்தனர்.

மாநகராட்சி மாமன்றக் கூட்டத்திலும் குறைக்க வேண்டும் என கவுன்சிலர்கள் வலியுறுத்தினர்.

இதனால் வரி உயர்வை மாற்றியமைப்பதற்கு மேயர் கொண்டு வந்த தீர்மானம், நேற்று மாமன்றத்தில் நிறைவேற்றப்பட்டது.

இதன்படி, கைத்தறி கூடங்களுக்கு 50%, விசைத்தறி கூடங்களுக்கு 75%, நடுத்தர தொழிற்சாலைகளுக்கு 75%, பெரிய தொழிற்சாலைகளுக்கு 100%, திருமண மண்டபத்திற்கு 125%, தங்கும் விடுதிகளுக்கு 125%, கடைகள் ஏ, மற்றும் பி- பிரிவுகளுக்கு 100%, சிறிய கடைகள் சி மற்றும் டி பிரிவுகளுக்கு 75% சொத்து வரி உயர்த்துவது என்று முடிவு செய்யப்பட்டது.

வெப்துனியாவைப் படிக்கவும்