புது டெல்லி: பஞ்சாப் நேஷனல் வங்கி கடனுக்கான வட்டி விகிதத்தை அரை விழுக்காடு குறைத்துள்ளது. இந்த வட்டி குறைப்பு நாளை முதல் அமலுக்கு வருவதாக அறிவித்துள்ளது.
இந்தியாவில் பொதுத்துறை வங்கிகளில். பெரிய வங்கிகளின் வரிசையில், பாரத ஸ்டேட் வங்கி முதல் இடத்திலும், பஞ்சாப் நேஷனல் வங்கி இரண்டாவது இடத்திலும் உள்ளது.
இந்த வங்கி கடனுக்கான வட்டியை அரை விழுக்காடு குறைப்பதாக அறிவித்துள்ளது. இதை தொடர்ந்து மற்ற வங்கிகளும் வட்டி குறைப்பு நடவடிக்கைகளில் ஈடுபடலாம் என்று தெரிகிறது.
பஞ்சாப் நேஷனல் வங்கியின் மேலாண்மை இயக்குநர் கே.சி.சக்கரபர்த்தி செய்தியாளர்களிடம் கூறுகையில், நாங்கள் கடனுக்கான வட்டி விகிதத்தை அரை விழுக்காடு குறைத்துள்ளோம். இந்த புதிய வட்டி ஏற்கனவே கடன் பெற்றுள்ளவர்களுக்கும், புதிதாக கடன் பெறுபவர்களுக்கும் பொருந்தும்.
இதே போல் வைப்பு நிதிக்கான வட்டி விகிதத்தையும் அரை விழுக்காடு குறைத்துள்ளோம் என்று கூறினார்.
இந்த வங்கி தற்போது 14% வட்டி வசூலித்து வருகிறது. இனி வட்டி 13.50% ஆக இருக்கும்.
ரிசர்வ் வங்கி வங்கிகளின் ரொக்க இருப்பு விகித்தை 2.5% குறைத்துள்ளது. ரிசர்வ் வங்கியின் நடவடிக்கைக்கு பிறகு, வட்டியை குறைக்கும் முதல் வங்கி, பஞ்சாப் நேஷனல் வங்கி என்பது குறிப்பிடத்தக்கது.