சமையல் எரிவாயு விலை குறைப்பு?

வியாழன், 30 அக்டோபர் 2008 (12:42 IST)
சர்வதேச சந்தையில் கச்சா எண்ணெயின் விலை குறைந்து வருவதால், சமையல் எரிவாயுவின் விலையை குறைக்க மத்திய அரசு முடிவு செய்திருப்பதாக பெட்ரோலியத் துறை அமைச்சர் முரளி தியோரா சூசகமாகத் தெரிவித்தார்.

புதுடெல்லியில் இதுகுறித்து செய்தியாளர்களுக்குப் பேட்டியளித்த அவர், ஏழை மக்கள் நலனில் அக்கறை கொண்டுள்ள ஐக்கிய முற்போக்குக் கூட்டணி அரசு, சமையல் எரிவாயுவின் விலையை குறைப்பது குறித்து ஆலோசித்து வருவதாகக் கூறினார்.

சமையல் எரிவாயுவின் விலை குறைப்பு குறித்த அறிவிப்பு இன்னும் ஒருவாரத்தில் வெளியாகலாம் என்று அவர் சூசகமாகக் குறிப்பிட்டார்.

இந்தியாவைப் பொருத்தவரை சமையல் எரிவாயுவை 11 கோடி குடும்பத்தினர் பயன்படுத்துவதாகவும், அதனை பயன்படுத்தும் பெண்களின் நலனைக் கருத்தில் கொண்டு சமையல் எரிவாயு விலை குறைப்பு பற்றி ஆய்வு செய்து வருவதாகவும் அவர் கூறினார்.

எண்ணெய் நிறுவனங்கள் இன்னமும் நஷ்டத்தில்தான் இயங்கி வருவதாகக் கூறிய அவர், பொருளாதார சூழ்நிலை ஒத்துழைத்தால் சமையல் எரிவாயு விலை குறைக்கப்படும் என்றார்.

பொதுத்துறை எண்ணெய் நிறுவனங்களுக்கு மிகப்பெரிய அளவு நஷ்டம் ஏற்பட்ட போதிலும் கூட ஏழை மக்கள் அதிகளவில் பயன்படுத்தும் மண்ணெண்ணெய் விலையை மத்திய அரசு உயர்த்தவில்லை என்றார் அவர்.

வெப்துனியாவைப் படிக்கவும்