வாஷிங்டன்: அமெரிக்க ரிசர்வ் வங்கி நேற்று வங்கிகளுக்கான வட்டி விகிதத்தை அரை விழுக்காடு குறைத்தது.
அமெரிக்கா பொருளாதார நெருக்கடிக்கு தீர்வு காண பல நடவடிக்கைககளை எடுத்து வருகிறது. ஏற்கனவே அமெரிக்க அரசு, அந்நாட்டில் திவாலான, நஷ்டமடைந்த வங்கி, நிதி நிறுவனங்களின் பங்குகளை வாங்குவது உட்பட பல்வேறு நடவடிக்கைகளுக்காக 700 பில்லியன் டாலர் ஒதுக்கியுள்ளது.
மக்களின் வாங்கும் சக்தி குறைந்ததால், பல்வேறு உற்பத்தியில் ஈடுபட்டுள்ள நிறுவனங்களின் விற்பனை குறைந்தது. அத்துடன் தொடர்ந்து 9 மாதங்களாக வேலை இல்லா திண்டாட்டமும் அதிகரித்தது.
இதனை கருத்தில் கொண்டு ரிசர்வ் வங்கி வட்டி விகிதத்தை குறைக்கும் என்று பொருளாதார நிபுணர்கள் எதிர்பார்த்தனர்.
இந்நிலையில் நேற்று அமெரிக்க ரிசர்வ் வங்கி கடனுக்கான வட்டியை அரை விழுக்காடு குறைத்து இருப்பதாக அறிவித்துள்ளது. நிலைமை சீரடையாவிட்டால் மேலும் வட்டி குறைப்பு இருக்கும் என்று தெரிகிறது.
இத்துடன் ரிசர்வ் வங்கி, மற்ற வங்கிகளுக்கு கொடுக்கும் ஒரு நாள் கடனுக்கான வட்டியையும் 1.75% இல் இருந்து 1.25% ஆக குறைத்துள்ளது.
தற்போது வங்கிகள், கடன் வாங்குபவர்களுக்கு 4.5% வட்டி விதிக்கின்றன. இனி இது 4% ஆக குறையும்.
இது குறித்து ரிசர்வ் வங்கி வெளியிட்டுள்ள செய்திக் குறிப்பில், நுகர்வோர் (மக்கள்) செலவழிப்பது குறைந்துள்ளதால், பொருளாதார நடவடிக்கைகள் மிக மெதுவாக உள்ளன. இத்துடன் நிதிசந்தையின் வீழ்ச்சி மேலும் சுமையை ஏற்படுத்தி உள்ளது என்று கூறியுள்ளது.
அமெரிக்காவில் ஏற்பட்டுள்ள பொருளாதார நெருக்கடியால், அந்நாட்டு பங்குச் சந்தைகளில் கடந்த ஐந்து வருடங்களில் இல்லாத அளவிற்கு குறியீட்டு எண்கள் சரிந்துள்ளன. அதே போல் டாலரின் மதிப்பும் குறைந்தது.
அமெரிக்க ரிசர்வ் வங்கி கடந்த 13 மாதங்களில் ஒன்பது முறை வட்டியை குறைத்துள்ளது.
அமெரிக்க ரிசர்வ் வங்கியை தொடர்ந்து மற்ற நாட்டு வங்கிகளும் வட்டி குறைப்பு நடவடிக்கையில் ஈடுபட்டுள்ளன.
சீனா, நார்வே ஆகிய நாடுகளின் ரிசர்வ் வங்கிகளும் நேற்று வட்டியை குறைத்தன.
இதை தொடர்ந்து அடுத்த சில நாட்களில் ஜப்பான் வங்கி ( பாங்க் ஆப் ஜப்பான்), ஐரோப்பிய நாடுகளைச் சேர்ந்த ரிசர்வ் வங்கிகள், பாங்க் ஆப் இங்கிலாந்து ஆகியவையும் வட்டியை குறைக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.