ஆப்பிளுக்கு பதில் வாழைப்பழம்!

புதன், 29 அக்டோபர் 2008 (18:16 IST)
ஸ்ரீநகர்: இந்தியா, பாகிஸ்தான் ஆகிய இரு நாடுகளையும் பிரிக்கும் கட்டுப்பாடு கோடு எல்லை வழியாக இரு நாடுகளுக்கு இடையிலான வர்த்தகம் தொடங்கியது. இங்கிருந்து ஆப்பிள் அனுப்பப் படுகிறது.இதற்கு பதிலாக அங்கிருந்து வாழைப்பழம் பெறப்படுகிறது.

இந்தியாவில் இருந்து ஆப்பிள், உலர் பழங்கள் உட்பட பல்வேறு பொருட்கள் ஊரி பிராந்தியத்தில் எல்லைக் கட்டுப்பாடு கோடு அருகில் இந்திய காவல் சாவடியான கமன் அருகே உள்ள அமன் சேது பாதை வழியாக 20 லாரி சரக்குகள் சென்றன.

இவை பாகிஸ்தான் வசம் இருக்கும் காஷ்மீர் பகுதிக்கு அனுப்பப் பட்டன.

காஷ்மீர் மாநிலத்தில் இருந்து, இந்த எல்லைக் கட்டுப்பாடு கோடு வழியாக இரு நாடுகளுக்கு இடையிலான வர்த்தகம் சென்ற அக்டோபர் 21 ஆம் தேதி முதல் துவக்கப்பட்டது. இந்த பகுதியில் இருந்து 60 வருடங்களுக்கு பிறகு சரக்கு போக்குவரத்து துவக்கப்பட்டுள்ளது.

இந்தியாவின் காஷ்மீர் பகுதியில் இருந்து, இரண்டாவது முறையாக சரக்குகள் பாக் வசம் உள்ள காஷ்மீருக்கு அனுப்பப்பட்டுள்ளன.

சலாமாபாத்தில் 17 லாரி சரக்குகள் உரிய சோதனைக்கு பிறகு நண்பகல் 2.30 மணியளவில் பாகிஸ்தான் பகுதிக்கு செல்ல புறப்பட்டு சென்றன. இவற்றில் ஆப்பிள் உட்பட பல வகையான பழங்கள், உலர் பழங்கள், மற்ற பல வகை பொருட்கள் உள்ளன.

இந்த லாரிகள் அமன் சேதுவை கடந்து சாக்கோடி வரை செல்ல அனுமதிக்கப்படும். அங்கு லாரியில் இருந்து சரக்குகள் இறக்கி, வேறு வாகனங்களில் பாகிஸ்தானின் பல்வேறு பகுதிகளுக்கு அனுப்பி வைக்கப்படும்.

இதே போல் பாகிஸ்தான் வசம் உள்ள காஷ்மீர் பகுதியில் இருந்து வாழைப்பழம், மாதுளை, உலர் பழங்கள், வெங்காயம் உட்பட பல்வேறு வகையான பொருட்கள் இந்திய பகுதிக்கு வந்து சேர்ந்தது என்று அதிகாரிகள் தெரிவித்தனர்.

காஷ்மீரில் உள்ள வியாபாரிகள், பழத் தோட்ட விவசாயிகள் உட்பட பல்வேறு தரப்பினரும், இரண்டு நாடுகளுக்கும் இடையே தகவல் தொடர்பு சரியாக இல்லை. குறிப்பாக இங்கிருந்து பாகிஸ்தான், பாகிஸ்தான் வசம் உள்ள காஷ்மீர் பகுதிகளுக்கு தொலைபேசி உட்பட தகவல் தொடர்பு வசதிகள் உரிய முறையில் இல்லை.

இதனால் அண்டை நாட்டில் உள்ள வியாபாரிகளின் தேவையை அறிய முடியாமல் உள்ளது. இதே போல் இங்கு தேவையான பொருட்களை வாங்க முடியாமலும் உள்ளது என்று கூறுகின்றனர்.

வெப்துனியாவைப் படிக்கவும்