கோவை: கடந்த வாரத்தில் பெய்த கன மழையால், சிறுவாணி அணையின் நீர் மட்டம் அதிகரித்து வருகிறது.
சிறுவாணி, பில்லூர் அணைகளில் இருந்து கோவை நகருக்கு குடிநீர் விநியோகம் செய்யப்படுகிறது. சிறுவாணி அணையில் இருந்து தினசரி 75 மில்லியன் லிட்டரும், பில்லூர் அணையில் இருந்து 63 மில்லியன் லிட்டர் தண்ணீர் கோவை நகர குடிநீருக்காக பெறப்படுகிறது.
இந்த அணைகளின் நீர் பிடிப்பு பகுதிகளில். தென்மேற்கு பருவமழை பொய்த்துவிட்டது. இதனால் சிறுவாணி அணை நிரம்பவில்லை.
இதற்கு மாறாக வடகிழக்கு பருவமழை பெய்துவருகிறது. இதனால் சிறுவாணி அணையின் நீர்மட்டம் அதிகரித்து வருகிறது.
இந்த அணையின் நீர்ப்பிடிப்புப் பகுதிகளான சிறுவாணி மலை மற்றும் அங்குள்ள பாம்பாறு, பட்டியாறு, முக்திகுளம் சுனைகளில் இருந்து நீர்வரத்து அதிகரித்துள்ளது.
இந்த பகுதிகளில் இன்னும் இரு தினங்களுக்குள் கன மழை பெய்தால் அணை நிரம்பிவிடும் என குடிநீர் வடிகால் வாரிய அதிகாரிகள் தெரிவித்தனர்..
சிறுவாணி அணை கடந்த வருடம் ஜூலை 17-ம் தேதி நிரம்பியது. இதன் நீர் மட்டம் தொடர்ந்து 3 மாதங்களுக்கு குறையாமல் இருந்தது. இந்த ஆண்டு இதுவரை அணை நிரம்பவில்லை.